தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்


தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 14 Jun 2019 4:30 AM IST (Updated: 14 Jun 2019 12:39 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் 721 அலுவலர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

இந்தநிலையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.

இதில், திருவையாறு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணி புரிந்து வந்த கார்த்திகேயன், திருவோணத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்தும், பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலராக பணி புரிந்து தற்போது அம்மாப்பேட்டையில் பணியாற்றி வரும் ரகுநாதன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலெக்டர் அண்ணாதுரை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அலுவலர்கள் கூறிய கருத்துக்களை எல்லாம் கேட்டறிந்த கலெக்டர், எழுத்துப்பூர்வமாக உங்களது கோரிக்கைகளை எழுதி கொடுத்தால் பரிசீலனை செய்யப்படும் என கூறினார்.

இதையடுத்து காலை 11 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை நடை பெற்ற உள்ளிருப்பு போராட்டத்தை அலுவலர்கள் கைவிட்டனர்.

Next Story