கூடலூர் பகுதியில், சூறாவளி காற்றில் வாழைகள் சேதம் - மின்சார வினியோகம் பாதிப்பு


கூடலூர் பகுதியில், சூறாவளி காற்றில் வாழைகள் சேதம் - மின்சார வினியோகம் பாதிப்பு
x
தினத்தந்தி 13 Jun 2019 10:15 PM GMT (Updated: 13 Jun 2019 11:32 PM GMT)

கூடலூர் பகுதியில் சூறாவளி காற்று தொடர்ந்து வீசுவதால் வாழைகள் சாய்ந்து விவசாயிகள் பல லட்சம் நஷ்டம் அடைந்துள்ளனர். மேலும் மின்சார வினியோகமும் பாதிக்கப்பட்டது.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. மேலும் சூறாவளி காற்றும் வீசியது. இதனால் முதுமலை, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து விழுந்து மின்கம்பிகள் சேதம் அடைந்தது. இதனால் 2 தினங்கள் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் மின்சாரம் அடியோடு துண்டிக்கப்பட்டது. இதனால் கொட்டும் மழையில் மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட் டனர்.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு கூடலூர் பகுதியில் மின்சாரம் வழங்கப்பட்டது. இருப்பினும் சூறாவளி காற்று தொடர்ந்து பலமாக வீசி வருகிறது. இதனால் மின்சார வினியோகமும் அடிக்கடி பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இதேபோல் சூறாவளி காற்றில் கூடலூர் தொரப்பள்ளி, குனில், கம்மாத்தி, நம்பாலக்கோட்டை உள்பட பல இடங்களில் குலைகளுடன் விளைந்து இருந்த வாழைகள் சாய்ந்து விழுந்தது.

கூடலூர் குனில் பகுதியை சேர்ந்த விவசாயி ஜோயி என்பவர் ஆயிரம் வாழைகளை பயிரிட்டு கடந்த 1 ஆண்டாக பராமரித்து வந்தார். வாழைகள் குலைகளுடன் பாதி விளைந்து இருந்தது. இதனால் 2 மாதங்களில் வாழைத்தார்களை அறுவடை செய்ய திட்டமிட்டு இருந்தார். இதனிடையே சூறாவளி காற்று தொடர்ந்து கூடலூர் பகுதியில் வீசுவதால் வாழைகளை கயிறு கொண்டு கட்டி வைத்தார். ஆனால் காற்றில் அனைத்து வாழைகளும் சாய்ந்தது. பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஜோயி மற்றும் அவரது குடும்பத்தினர் கண்கலங்கினர்.

இதேபோல் நம்பாலக்கோட்டை பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு 200 வாழைகள் காற்றில் சாய்ந்தது. இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறும்போது, கடந்த ஏப்ரல் மாதம் கூடலூர் பகுதியில் வீசிய சூறாவளி காற்றில் 1 லட்சம் நேந்திரன் வாழைகள் சரிந்தது. இதனால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. விளைச்சல் பாதிக்கப்பட்டதால் நேந்திரன் வாழைப்பழங்களின் விலை நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இந்தசமயத்தில் பாதுகாப்பாக பராமரித்து வந்த மீதமுள்ள வாழைகள் தற்போது சாய்ந்து விட்டது.

இன்னும் 2 மாதங்கள் மட்டும் நின்றிருந்தால் நல்ல விலை கிடைத்து இருக்கும். இப்போது வாங்கிய கடனை அடைக்க முடியாத அளவுக்கு நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சேதம் அடைந்த வாழைகளுக்கு உரிய இழப்பீடு தொகையை அரசு வழங்கினால் விவசாயத்தை தொடர்வதற்கு வசதியாக இருக்கும். இல்லை எனில் வேறு பிழைப்பை தேட வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பந்தலூர் தாலுகா பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் கூவமூலா ஆதிவாசி காலனியில் வெள்ளச்சி என்பவரின் வீடு இடிந்தது. தகவல் அறிந்த பந்தலூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் காமு, கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் நேரில் சென்று சேதம் அடைந்த வீட்டை பார்வையிட்டனர்.

Next Story