மேட்டுப்பாளையம் அருகே, அட்டகாசம் செய்த சிறுத்தை கூண்டில் சிக்கியது - வனப்பகுதியில் விடப்பட்டது


மேட்டுப்பாளையம் அருகே, அட்டகாசம் செய்த சிறுத்தை கூண்டில் சிக்கியது - வனப்பகுதியில் விடப்பட்டது
x
தினத்தந்தி 13 Jun 2019 11:00 PM GMT (Updated: 13 Jun 2019 11:32 PM GMT)

மேட்டுப்பாளையம் அருகே அட்டகாசம் செய்து வந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். பின்னர் அது வனப்பகுதியில் விடப்பட்டது.

மேட்டுப்பாளையம், 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறுமுகை செல்லும் சாலையில் மோத்தேபாளையம் உள்ளது. இந்த கிராமம், கோவை வனக்கோட்டம் சிறுமுகை வனச்சரகம் சென்னாமலைக்கரடு என்னும் வனப்பகுதி அருகே உள்ளது.

சென்னாமலைக்கரடு வனப்பகுதியில் இருந்து கடந்த சில மாதங்களாக இரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று குட்டிகளு டன் மோத்தேபாளையம் கிராமத்திற்குள் புகுந்தது. அது தோட்டங்களில் இருந்த கன்றுக்குட்டிகள் மற்றும் நாய்களை கடித்துக்குதறி கொன்றது.

சிறுத்தையின் அட்டகாசம் மற்றும் நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். பகல் மற்றும் இரவு நேரங்களில் வெளியில் நடமாட பயந்து வீட்டிற்குள்ளேயே முடங்கினர்..

எனவே அட்டகாசம் செய்து வந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கிராமமக்கள் சிறுமுகை வனத்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்தனர். அதன் பேரில் சிறுமுகை வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிய தானியங்கி கேமராவை பல்வேறு இடங்களில் வைத்து தீவிர கண்காணித்தனர்.

கேமராவில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவானது. இதையடுத்து சிறுத்தை நடமாட்டம் இருந்த தோட்டத்தை யொட்டிய வனப்பகுதியில் வனத்துறையினர் நேற்று முன்தினம் மாலை இரும்பு கூண்டு வைத்தனர்.

இரண்டாக பிரிக்கப்பட்ட கூண்டின் பின்புறம் ஒரு ஆட்டை கட்டி, செடி, கொடி மற்றும் இலை தழைகளால் மூடி வைத்தனர். அங்கு வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் சென்று பார்த்த போது கூண்டுக்குள் சிறுத்தை உறுமும் சத்தம் கேட்டது. உடனே அவர்கள் கூண்டிற்குள் பார்த்த போது சிறுத்தை சிக்கி இருப்பதும், அது கூண்டுக்குள் ஆக்ரோஷமாக இருப்பதும் தெரிய வந்தது.

இது குறித்த தகவலின் பேரில் சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோகரன், வனவர் ராதாகிருஷ்ணன் மற்றும் வனத்துறையினர், வேட்டைதடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, கூண்டில் சிக்கிய சிறுத்தையை பார்வையிட்டனர்.

கூண்டில் சிக்கிய சிறுத்தைக்கு 2 வயது மதிக்கத்தக்கது என்றும். அது பெண் சிறுத்தை என்றும் வனத்துறையினர் கூறினர். இது குறித்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில் கூண்டில் சிக்கிய சிறுத்தை லாரியில் பத்திரமாக ஏற்றி பவானிசாகர் அருகே உள்ள தெங்குமரஹாடா வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கூண்டின் கதவை வனத்துறையினர் திறந்து விட்டனர். உடனே அந்த சிறுத்தை கூண்டில் இருந்து சீறிப்பாய்ந்து வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது.

மோத்தேபாளையம் பகுதியில் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டதால் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர். அவர்கள் வனத்துறையினருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

மோத்தேபாளையம் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு ஏற்கனவே ஒரு சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story