ஓமலூர் அருகே பட்டப்பகலில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் பொதுமக்கள் சாலை மறியல்
ஓமலூர் அருகே பட்டப்பகலில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஓமலூர்,
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரம் ஊராட்சியில் நேற்று காலை 100 நாள் வேலை உறுதித்திட்டத்தின் கீழ் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அருகில் இருந்த கரும்பு தோட்டப்பகுதிக்கு இயற்கை உபாதையை கழிக்க சென்றுள்ளார்.
இதனிடையே அங்கு மறைந்திருந்த காமலாபுரம் காலனி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது ஆடைகளை கழற்றி, அந்த பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். மேலும் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சத்தமிட்டபடி அங்கிருந்து ஓட்டம் பிடிக்கவே, பின்னாலேயே அந்த வாலிபர் துரத்தி சென்றார்.
அப்போது அங்கிருந்த பெண்கள் சத்தத்தை கேட்டு ஓடிவந்தனர். இ்தைப் பார்த்ததும் அந்த வாலிபர் திரும்பி ஓட்டம் பிடித்தார். உடனே சிலர் அந்த வாலிபரை விரட்டிச் சென்று பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த வாலிபர் கத்தியை காட்டி அவர்களை மிரட்டியபடி தப்பி ஓடி விட்டார்.
இதைத்தொடர்ந்து அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஓமலூரில் இருந்து நாலுகால் பாலம் செல்லும் ரோட்டில் காமலாபுரம் காலனி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த ஓமலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது சம்பந்தப்பட்ட வாலிபர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இதனால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் காலை 10 மணி முதல் 11 மணி வரை ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறுகையில், பட்டப்பகலில் இதுபோன்று பெண்களிடம் தகாத முறையில் நடக்க முயற்சி செய்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும். மேலும் வேலை செய்யும் இடத்தில் வாலிபர்கள் தினமும் குடித்துவிட்டு ஆபாச வார்த்தைகளால் பேசுகிறார்கள். பெண்களுக்கு தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து வருகிறார்கள். எனவே பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.
Related Tags :
Next Story