குன்னூரில், ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்


குன்னூரில், ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
x
தினத்தந்தி 14 Jun 2019 10:15 PM GMT (Updated: 14 Jun 2019 7:40 PM GMT)

குன்னூரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.

குன்னூர்,

குன்னூரில் உள்ள சுற்றுலா தலங்களில் சிம்ஸ் பூங்கா முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த பூங்கா தோட்டக்கலைத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. சிம்ஸ் பூங்காவுக்கு அருகில் வனத்துறைக்கு சொந்தமான ஹைபீல்டு காப்புக்காடு உள்ளது. இங்கிருந்து வெளியேறும் காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் சிம்ஸ் பூங்காவுக்குள் நடமாடி வந்தன. இதனால் சுற்றுலா பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்து வந்தது. இதையடுத்து சிம்ஸ் பூங்காவில் வனவிலங்குகள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் ரூ.2 கோடி செலவில் 1,900 மீட்டர் நீளத்துக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி தொடங்கியது. ஆனால் 90 மீட்டர் நீளத்துக்குள் சுற்றுச்சுவர் கட்டும் பணி நிறுத்தப்பட்டது. இதற்கு காரணம் சிம்ஸ் பூங்காவின் நுழைவு வாயில் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளே ஆகும்.

நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் வைக்கப்பட்டு இருந்ததால், அவைகளை அகற்றி தர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறைக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. இதையொட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிம்ஸ் பூங்கா நுழைவு வாயிலை சுற்றி இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முயன்றனர். ஆனால் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பு காரணமாக அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது. இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவின்பேரில் நேற்று சிம்ஸ் பூங்கா நுழைவு வாயிலை சுற்றியுள்ள 24 ஆக்கிரமிப்பு கடைகளை போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினர்.

இதேபோன்று சேலாஸ் பகுதியில் போக்குவரத்து இடையூறாக அமைக்கப்பட்டு இருந்த 10 கடைகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நேற்று முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகள் முறையாக நில அளவை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனை ஏற்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். முன்னதாக அதிகாரிகள் கூறும்போது, வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று மீண்டும் நில அளவை செய்யப்படும். அதன்பிறகு போக்குவரத்து இடையூறாக உள்ள கடைகள் அகற்றப்படும். அதற்கு முன்பாக நெடுஞ்சாலைத்துறை இடத்தில் போக்குவரத்து இடையூறாக கடைகள் இருந்தால் அதனை வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து அகற்றிவிட வேண்டும் என்றனர்.

Next Story