பனங்குடியில், புயலில் சேதமடைந்த இரும்பு தடுப்பு கம்பிகள் சீரமைக்கப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு


பனங்குடியில், புயலில் சேதமடைந்த இரும்பு தடுப்பு கம்பிகள் சீரமைக்கப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 15 Jun 2019 3:45 AM IST (Updated: 15 Jun 2019 1:34 AM IST)
t-max-icont-min-icon

பனங்குடியில் புயலில் சேதமடைந்த இரும்பு தடுப்பு கம்பிகள் சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

திட்டச்சேரி, 

திட்டச்சேரி அருகே பனங்குடி ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பனங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் நாகை, திருவாரூர், நன்னிலம், கும்பகோணம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல நாகை-கும்பகோணம் சாலையை தான் பயன் படுத்தி வருகின்றனர்.

மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் இதே சாலையை தான் பயன்படுத்துகின்றனர். இந்த சாலையில் பனங்குடி பஸ் நிறுத்தம் உள்ளது. மேற்கண்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இந்த பஸ் நிறுத்ததிற்கு வந்து, அங்கிருந்து நாகை, திருவாரூர், நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ் ஏறி சென்று வருகின்றனர். பஸ் நிறுத்தத்திற்கு அருகே சாலையோரத்தில் இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலில் மரங்கள் சாய்ந்து விழுந்ததில் இரும்பு தடுப்பு கம்பிகள் சேதமடைந்தன. இதனால் இரவில் இந்த சாலையில் செல்வோர் தட்டுதடுமாறி செல்கின்றனர். புயல் வீசி 7 மாதங்களாகியும் இதுவரை சேதமடைந்த இரும்பு தடுப்பு கள் சீரமைக்கப்படாமல் உள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, புயலால் சேதமடைந்த இரும்பு தடுப்பு கம்பிகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Next Story