ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்: திற்பரப்பு அருவியில் குளிக்க திரண்ட சுற்றுலா பயணிகள்


ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்: திற்பரப்பு அருவியில் குளிக்க திரண்ட சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 16 Jun 2019 11:00 PM GMT (Updated: 16 Jun 2019 2:41 PM GMT)

திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளிக்க சுற்றுலா பயணிகள் திரண்டனர்.

குலசேகரம்,

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த வாரம் முழுவதும் பெய்தது. நேற்று காலை 8 மணி வரை குழித்துறையில் 5.5 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது. நாகர்கோவிலில் 1.1, மாம்பழத்துறையாறு 4, கோழிப்போர்விளை 2, குருந்தங்கோடு 4.2 மி.மீட்டர் என மழை பதிவாகி இருந்தது.

மழை எதிர்பார்த்த அளவு பெய்யாவிட்டாலும் அணைகளுக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 253 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர் மட்டம் 11.30 அடியாக உயர்ந்தது. இதே போல் பெருஞ்சாணி அணைக்கு 124 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர் மட்டம் 36.80 அடியானது. சிற்றார்(1) அணை 7.48 அடியாகவும், சிற்றார்(2) அணை 7.57 அடியாகவும், பொய்கை அணை 8.40 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையில் 44.95 அடியாகவும் நீர்மட்டம் உள்ளது.

மழை குறைந்த போதிலும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நேற்று விடுமுறை நாள் என்பதால் குமரி மாவட்டம் மட்டுமல்லாமல், அண்டை மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் திற்பரப்பு அருவிக்கு வந்தனர்.

திற்பரப்பு அருவியில் நேற்று சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் திரண்டதால், சாலைகளில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Next Story