அரசு பள்ளி மாணவிகளுக்கு 10 மாதங்கள் தற்காப்பு பயிற்சி அளிக்க வேண்டும் கலெக்டரிடம், கராத்தே சங்கத்தினர் மனு


அரசு பள்ளி மாணவிகளுக்கு 10 மாதங்கள் தற்காப்பு பயிற்சி அளிக்க வேண்டும் கலெக்டரிடம், கராத்தே சங்கத்தினர் மனு
x
தினத்தந்தி 18 Jun 2019 4:30 AM IST (Updated: 17 Jun 2019 10:56 PM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளி மாணவிகளுக்கு 10 மாதங்கள் தற்காப்பு பயிற்சி அளிக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாளில் கலெக்டரிடம், கராத்தே சங்கத்தினர் மனு கொடுத்துள்ளனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார். கூட்டத்தில் சத்துணவு திட்டத்தின்கீழ் சத்துணவு சமையலர்கள் 572 பேருக்கு தலா ரூ.505 மதிப்பில் சுகாதார பொருட்கள் அடங்கிய பாதுகாப்பு பெட்டகத்தை கலெக்டர் பிரசாந்த் வடநேரே வழங்கினார்.

இந்த பெட்டியில் ஆடை, தொப்பி, கைத்துணி, துண்டு, நகவெட்டி, 6 சோப்புகள் ஆகியன இருந்தன. கூட்டத்தில் வருவாய் அதிகாரி ரேவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ராஜாமணி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஜெயராணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக பொதுமக்கள் 388 பேரிடம் இருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் பிரசாந்த் வடநேரே பெற்றுக்கொண்டார். அப்போது குமரி மாவட்ட கராத்தே டூ சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் திரளாக வந்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

குமரி மாவட்டத்தில் 350–க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கு மட்டும் தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது. அதாவது கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ உள்ளிட்ட பயிற்சிகள் ஆர்.எம்.எஸ்.ஏ., எஸ்.எஸ்.ஏ. திட்டங்களின் கீழ் அளிக்கப்பட்டது. பயிற்சி காலத்தில் அரையாண்டு தேர்வு வருவதால் பயிற்சிக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் மாணவிகளுக்கு மாவட்ட, மாநில மற்றும் தேசிய போட்டிக்கு தயார் படுத்துவது இயலாமல் போகிறது.

மேலும் பயிற்சி அளிக்கும் எங்களுக்கும் 3 மாதம் மட்டுமே வருமானம் கிடைக்கிறது. எனவே அரசு பள்ளி மாணவிகளுக்கு இந்த கல்வி ஆண்டு முதல் தற்காப்பு பயிற்சி காலத்தை உயர்த்த வேண்டும். அதாவது 10 மாதங்கள் வரை தற்காப்பு பயிற்சி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

பாலபள்ளம் பத்தறை காலனியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் கொச்சுமணி கொடுத்த மனுவில், கல்குளம் தாலுகா ரீத்தாபுரம் பேரூராட்சியில் கரையாகுளம் உள்ளது. இந்த குளத்தின் மூலமாக பல ஏக்கர் விவசாயம் நடக்கிறது. மேலும் பேரூராட்சியில் 10–க்கும் மேற்பட்ட வார்டு மக்களின் குடிநீருக்காக 8 ஆழ்குழாய் கிணறுகள், 4 திறந்தவெளி கிணறுகள் மூலமாக தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. இந்த குளத்தில் தண்ணீர் தேக்குவதற்காக 40 ஆண்டுகளுக்கு முன்பு கூட்டமாவு அருகே பாம்பூரி வாய்க்கால் குறுக்கே அணை கட்டப்பட்டது. ஆனால் இந்த அணையின் ‌ஷட்டர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடைந்து தண்ணீர் வாய்க்கால் வழியாக வீணாக கடலுக்கு செல்கிறது. ஆனால் இதை பேரூராட்சி நிர்வாகம் சரிசெய்யவில்லை. எனவே தற்காலிக அணை போட்டு தண்ணீரை சேமிக்க வேண்டும். மேலும் கடலுக்கு செல்லும் தண்ணீரை குளத்திலேயே சேமித்து வைக்க ‌ஷட்டர் அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

விழுந்தயம்பலம் பொடுகல்விளையை சேர்ந்த ஜெயகலா என்பவர் அளித்த மனுவில், “என் மகன் அபினேஷ் ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்–2 படித்து வருகிறான். ஆனால் அவன் மீது பள்ளி நிர்வாகம் திடீரென பொய்யான காரணங்களை சொல்லி பள்ளியில் இருந்து வெளியேற்றிவிட்டனர். இதுதொடர்பாக முதன்மை கல்வி அதிகாரியிடம் புகார் அளித்தேன். ஆனால் முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்ட பிறகும் கூட என் மகனை மீண்டும் பள்ளியில் சேர்க்க மறுக்கிறார்கள். எனவே என் மகனை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு (விடுதலை) கட்சி நிர்வாகிகள் அளித்த மனுவில், “ரீத்தாபுரம் கிராம நிர்வாக அலுவலகத்துக்குட்பட்ட ஏழை முதியவர்களுக்கு முதியோர் பென்சன் வழங்கப்படுவது இல்லை. இதனால் அவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே முதியவர்களுக்கு முறையாக பென்சன் வழங்க வேண்டும். மேலும் இதை கண்டித்து வருகிற 24–ந் தேதி ரீத்தாபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம்“ என்று கூறப்பட்டுள்ளது.

Next Story