அடிப்படை வசதி கேட்டு ஜனநாயக மாதர் சங்கத்தினர் சாலை மறியல்
தொப்பம்பட்டியில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதி கேட்டு மாதர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கீரனூர்,
தொப்பம்பட்டி ஒன்றியத்தில் மானூர், கோரிக்கடவு, கள்ளிமந்தயம் உள்பட மொத்தம் 38 ஊராட்சிகள் உள்ளன. இங்கு சுமார் 1 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கொத்தயம், போடுவார்பட்டி, அப்பனூத்து உள்ளிட்ட பல கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும் பல கிராமங்களில் பொதுக்கழிப்பிட வசதி இல்லாததால் பெண்கள் கடும் தவிப்புக்கு உள்ளாகி வந்தனர்.
இந்நிலையில் ஒன்றிய பகுதியில் குடிநீர், கழிப்பிடம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தொப்பம்பட்டியில் நேற்று ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட செயலாளர் ராணி தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் சித்ரா மற்றும் மா.கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ராமசாமி, ஒன்றிய விவசாய சங்க செயலாளர் கனகு உள்பட மாதர் சங்கத்தினர் 75-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக அவர்கள் மறியலை கைவிட்டு தொப்பம்பட்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து ஒன்றிய அலுவலகம் நோக்கி ஊர்வலமாக வந்தனர். பின்னர் திடீரென ஒன்றிய அலுவலகம் முன்பு தாராபுரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த கீரனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் ஒன்றிய அலுவலகம் சென்று, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ராமனிடம் மனு கொடுத்தனர். அப்போது தொப்பம்பட்டி ஒன்றிய பகுதியில் குடிநீர், கழிப்பிடம், சாலை வசதிகளை முறையாக செயல்படுத்த வேண்டும். நிபா, டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். அப்போது மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story