பல்லடம் அருகே எலெக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் வீட்டில் 6 பவுன் நகை திருட்டு


பல்லடம் அருகே எலெக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் வீட்டில் 6 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 20 Jun 2019 4:30 AM IST (Updated: 20 Jun 2019 4:30 AM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே எலெக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் வீட்டில் 6 பவுன்நகையை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பல்லடம்,

எலெக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் வீட்டில் 6 பவுன்நகையை மர்ம ஆசாமிகள் திருடிய இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பல்லடம் அருகே உள்ள துரைசாமி நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 39). இவருடைய மனைவி கீதாபிரியா (36). இவர்களுக்கு பிரிதுல் (8), யுவன் (4) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். பிரிதுல் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 3-ம் வகுப்பும், யுவன் யு.கே.ஜி.யும் படித்து வருகின்றனர். பிரகாஷ் பல்லடத்தில் எலெக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார்.

தினமும் காலையில் கடைக்கு செல்லும் பிரகாஷ் மதிய உணவுக்கு மட்டும் வீட்டிற்கு வருவார். இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம் போல் குழந்தைகள் இருவரும் பள்ளிக்கு சென்று விட்டனர். பிரகாஷ் எலெக்ட்ரிக்கல் கடைக்கு சென்று விட்டார். இதனால் கீதா பிரியா மட்டும் வீ்ட்டில் இருந்தார். அவரும் வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று மதியம் சாப்பிடுவதற்காக பிரகாஷ் கடையில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். அப்போது வீ்ட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பீரோக்கள் இருந்த அறைக்கு சென்றார். அப்போது அங்கிருந்த பீரோக்களில் ஒன்று திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டு இருந்த துணிகள் கீழே சிதறிக்கிடந்தன. அதில் வைத்து இருந்த 6 பவுன்நகை திருட்டுப்போனது தெரியவந்தது.

இதற்கிடையில் கடைக்கு சென்ற கீதா பிரியாவும் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். அவர் வீட்டை பூட்டி விட்டு கடைக்கு செல்வதை நோட்டமிட்ட ஆசாமிகள், பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்து இருந்த 6 பவுன்நகையை திருடி சென்று இருப்பது தெரியவந்தது.

இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று விசாரணை செய்தனர். பின்னர் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சம்பவம் நடந்த வீட்டில் பதிவாகி இருந்த கைரேகையை பதிவு செய்தனர். பின்னர் அந்த திருட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகையை மர்ம ஆசாமிகள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

30 பவுன் நகை தப்பியது

பிரகாஷ் வீட்டில் 2 பீரோக்கள் உள்ளன. அதில் ஒரு பீரோ சாதாரண பீரோவாகும். மற்றொரு பீரோ கண்ணாடி பதித்தது. கண்ணாடி பதித்த பீரோவையை பார்க்கும்போது பீரோ போன்ற தோற்றத்தை தராது. மாறாக சுவரில் கண்ணாடி பதித்துள்ளதைபோன்று இருக்கும். காரணம் அந்த பீரோவில் உள்ள கதவை திறக்க கைப்பிடியோ, சாவி போடுவதற்கான அடையாளமோ எதுவும் இருக்காது.

இந்த நிலையில் பிரகாஷ் வீட்டிற்கு பட்டப்பகலில் சென்ற மர்ம ஆசாமிகள் கதவின் பூட்டை அவசரமாக உடைத்து விட்டு, பின்னர் வீட்டிற்குள் நுழைந்து அங்கு இருந்த பீரோக்களில் ஒன்றை மட்டும் உடைத்து அதில் இருந்த 6 பவுன்நகையை மட்டும் திருடி சென்றுள்ளனர். அங்கிருந்து மற்றொரு பீரோ கண்ணாடி போன்ற தோற்றத்தில் இருந்ததால் அது சுவரில் உள்ள கண்ணாடி என மர்ம ஆசாமிகள் நினைத்து அந்த பீரோவை உடைக்காமல் சென்று விட்டனர். இதனால்தான் அந்த பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 30 பவுன் நகை தப்பியது.



Next Story