குடிநீர் பிரச்சினையை சமாளிக்க ரூ.8 கோடியில் பணிகள் - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தகவல்


குடிநீர் பிரச்சினையை சமாளிக்க ரூ.8 கோடியில் பணிகள் - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தகவல்
x
தினத்தந்தி 20 Jun 2019 11:00 PM GMT (Updated: 21 Jun 2019 12:14 AM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க சுமார் ரூ.8 கோடியில் திட்ட பணிகள் நடந்து வருவதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

விருதுநகர், 

விருதுநகரில், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை களப்பணியாளர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் சிவஞானம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பேசுகையில் அவர் கூறியதாவது:-

குடிநீர் வழங்கும் பணியில் ஒன்றிய மேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் தனி கவனம் செலுத்தி, அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் கிடைக்குமாறு செய்திட வேண்டும். புகார் வரப்பெறும் இடத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு புகாரினை நிவர்த்தி செய்திட வேண்டும். மேலும், மோட்டார் பழுது, குடிநீர் குழாய் உடைப்பு போன்ற இடங்களை ஆய்வு செய்து உடனடியாக சரிசெய்து, குடிநீர் வினியோகத்தை சீர்படுத்த வேண்டும்.

மேலும், ஊரகப் பகுதிகளில் செயல்படும் குடிநீர் ஆதார அமைப்புகள், தெருவிளக்குகள் மற்றும் சுகாதாரப்பணிகளை அனைத்து அலுவலர்களும் அவ்வப்போது ஆய்வு செய்தும், கிராம மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தும் பொதுமக்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்ய வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊரகப்பகுதிகளிலும் 191 புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகளும், 77 இடங்களில் குடிநீர் குழாய் விரிவாக்கம் செய்யும் பணிகளும், 1 திறந்தவெளி கிணறு ஆழப்படுத்தும் பணியும், 1 புதிய மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைக்கும் பணியும், 16 மின் மோட்டார் திறன் அதிகரித்து இணைப்பு விரிவாக்கம் செய்யும் பணிகளும் என மொத்தம் 286 பணிகளுக்கு சுமார் ரூ.8 கோடி மதிப்பீட்டில் தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நோக்குடனும் விவசாய நிலங்களில் பண்ணைக்குட்டைகள் அமைத்தல், தனிநபர் மற்றும் சமுதாய கழிவுநீர் உறிஞ்சுகுழி அமைத்தல், ஏற்கனவே அமைக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணற்றை சுற்றிலும் மழைநீர் செறிவூட்டும் அமைப்பு, வரத்துக்கால்வாய்களில் தடுப்பணைகள் கட்டுதல், சிறு,குறு விவசாயிகளுக்கு திறந்தவெளி கிணறு அமைத்துக்கொடுத்தல் மற்றும் சாலையோரங்களில் மரக்கன்று நடுதல் போன்ற பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.பொதுமக்கள் குடிநீர் பிரச்சினைகள் தொடர்பான புகார்களை மாவட்ட அளவில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திற்கு 04562252909 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். வட்டார அளவிலும் புகார்களை போன் மூலம் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வில் எம்.எல்.ஏ.க்கள் சந்திரபிரபா, ராஜவர்மன், மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story