தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டினால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை


தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டினால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 21 Jun 2019 9:45 PM GMT (Updated: 21 Jun 2019 4:53 PM GMT)

கிரானைட் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் திடக்கழிவுகளை சாலையோரம், நீர்நிலைகளில் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பிரபாகர் எச்சரித்துள்ளார்.

கிரு‌‌ஷ்ணகிரி, 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் கிரானைட் கல் மெருகூட்டும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் திடக்கழிவுகள் சாலையோரங்கள், நீர்நிலைகள் மற்றும் பொது இடங்களுக்கு அருகில் குவித்து வைப்பதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் மனுக்கள் வருகின்றன.

மேலும் இது குறித்து பொதுமக்கள் அளிக்கும் புகார் மனு தொடர்பாக ஆய்வின் போது கிரானைட் கல் மெருகூட்டும் திடக்கழிவுகள் ஆங்காங்கே சாலையோரங்கள், நீர்நிலைகள் மற்றும் திறந்தவெளி நிலங்களின் அருகில் கொட்டி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாக தெரிகிறது.

எனவே, கிரானைட் கல் மெருகூட்டும் தொழிற்சாலைகள் தங்கள் தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றும் திடக்கழிவுகளை தொழிற்சாலை வளாகத்திற்குள்ளாகவே தாழ்வான பகுதிகளில் முறைப்படி சேமித்து வைத்து பசுமை போர்வையை உருவாக்கும் படி மாவட்ட நிர்வாகத்தால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேற்கூறிய நிபந்தனைகளை தொழிற்சாலைகள் மீறினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story