நாங்கூரில் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட சங்க கால பொருட்கள் குறித்த கண்காட்சி


நாங்கூரில் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட சங்க கால பொருட்கள் குறித்த கண்காட்சி
x
தினத்தந்தி 21 Jun 2019 10:30 PM GMT (Updated: 21 Jun 2019 5:12 PM GMT)

நாங்கூரில் அகழ் வாராய்ச்சியில் கண்டெடுக் கப்பட்ட சங்ககால பொருட்கள் குறித்த கண்காட்சி நடைபெற்றது. இதனை மாணவ- மாணவிகள் பார்வையிட்டனர்.

திருவெண்காடு,

நாகை மாவட்டம், சீர்காழி அருகே நாங்கூரில் கடந்த சில நாட்களாக தஞ்சை தமிழ் பல்கலைக்கழக கடல்சார் வரலாறு மற்றும் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. பேராசிரியர் செல்வக்குமார் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் அப்பகுதியில் முகாமிட்டு அகழ்வாராய்ச்சி மேற்கொண்டனர். இதனை பல கல்லூரியில் படிக்கும் தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சி மாணவர்களும் பார்வையிட்டு கற்றறிந்தனர்.

இந்த ஆய்வின்போது, மீன் உருவம் பொறித்த கீறல் எழுத்துக்களுடன் கூடிய ஓடுகள், இரும்பு பொருட்கள் செய்யும் கொல்லர் பட்டறைகள், சுடுமண் பொம்மைகள், பழங்கால காதணிகள், கண்ணாடி மணிகள், கல்மணிகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் நாங்கூர் என்பது சங்க காலத்தில் இருந்த மனிதர்கள் வசித்து வந்த ஊராக அறியமுடிவதாக, தஞ்சை பல்கலைக்கழக பேராசிரியர் தெரிவித்துள்ளார். இந்த ஊரில் 10 அடி ஆழத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், சங்க காலம், இடைக்காலம் மற்றும் முற்கால சோழர்கள், பிற்கால சோழர்கள் காலத்து பொருட்கள், படிமங்கள் கிடைத்துள்ளன. இதன் மூலம் நாங்கூர் என்பது சங்க காலத்தை சார்ந்த கி.மு.3-ம் நூற்றாண்டில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான சரித்திர சான்றுகள் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை கொண்ட கண்காட்சி நாங்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் ஏராளமானோர் இக்கண் காட்சியை கண்டுகளித்தனர். அப்போது மாணவர்களுக்கு, தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் ஊழியர்கள் சங்க கால பொருட்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.

Next Story