தண்ணீர் தட்டுப்பாட்டில் தத்தளிக்கும் பெரம்பலூர் நகராட்சி மக்கள்


தண்ணீர் தட்டுப்பாட்டில் தத்தளிக்கும் பெரம்பலூர் நகராட்சி மக்கள்
x
தினத்தந்தி 21 Jun 2019 11:00 PM GMT (Updated: 2019-06-22T05:17:42+05:30)

கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக பெரம்பலூர் நகராட்சி பகுதி மக்கள் தத்தளித்து வருகின்றனர்.

பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்டத்தில் போதிய மழை பெய்யாததால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. மேலும் மழை பெய்யாததால் மாவட்டத்தில் ஏரி, குளங்கள் தண்ணீரின்றி பரிதாபமாக காட்சியளிக்கின்றன. தொடர்ந்து தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனால் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் குடிநீர் கேட்டு போராட்டங்களை நடத்திய வண்ணம் உள்ளனர். மேலும் பெரம்பலூர் நகருக்கு காவிரி, கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது பெரம்பலூரின் மக்கள் தொகை 1 லட்சத்து 20 ஆயிரத்தை எட்டியுள்ளது.

காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் சரியாக குடிநீர் வினியோகிக்கப்படாததால் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் பெரம்பலூர் நகருக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. பெரம்பலூர் நகருக்கு திருச்சி நம்பர் 1 டோல்கேட் அருகே தாளக் குடி பகுதி கொள்ளிடத்தில் கிணறு தோண்டப்பட்டு வினியோகிக் கப்படும் குடிநீர் பெரகம்பி, செட்டிகுளம், சத்திரமனை, வேலூர், கீழக்கணவாய் ஆகிய ஊராட்சிகள், குரும்பலூர் பேரூராட்சி உள்பட 55 சாலையோர கிராமங்களை கடந்து பெரம்பலூர் வந்தடைய வேண்டும்.

வாரத்திற்கு ஒரு முறை அல்லது 8 நாட்களுக்கு ஒரு முறை என்ற அளவிலேயே முறைவைத்து நகராட்சி நிர்வாகத்தால் குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் பெரம்பலூர் நகராட்சி பகுதிகளில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் தத்தளித்து வருகின்றனர். மேலும் பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட தெப்பக்குளம் மூலைக்கிணறு, துறையூர் சாலை ஓரக்கிணறு, எளம்பலூர் சாலையில் உள்ள சர்க்கார் கிணறு, ஆலம்பாடி கோனேரி ஆற்றங்கரையோர கிணறுகள், உப்புஓடை கிணறுகள், பெரம்பலூர் பெரிய ஏரி, துறைமங்கலம் ஏரிப்பகுதிகளில் உள்ள குடிநீர் கிணறுகள், செங்குணம் ஓடையில் உள்ள கிணறு உள்பட 15-க்கும் மேற்பட்ட கிணறுகளில் இருந்து தெருக்குழாய்கள் மூலம் கடந்த ஓர் ஆண்டுக்கு முன்புவரை வறட்சி காலங்களில் புழங்குவதற்கான தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. நகராட்சி நிர்வாகத்திற்கு வருமானம் பாதிக்கப்படும் என்று கூறி, ஓரிரு இடங்களை தவிர தெருக்குழாய்கள் அனைத்தும் பராமரிக்கப்படாமல் பழுதடைந்துள்ளதால் தெருக்குழாய்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. வெளிப்புற உபயோகத்திற்கான தண்ணீர் வழங்கப்பட்டாலே அவர்கள் அந்த தண்ணீரை சுத்திகரித்து குடிநீராக பயன்படுத்த முடியும். ஆனால் தற்போது அதற்கும் வழியின்றி உள்ளது.

பெரம்பலூரில் வீட்டுக்கு வீடு ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டுள்ளன. ஏறத்தாழ 40 ஆயிரம் ஆழ்துளை கிணறுகள் பெரம்பலூரில் தோண்டப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெரம்பலூரில் கலெக்டர் அலுவலக சாலை, விளாமுத்தூர் சாலை, பெரிய தெற்குத்தெரு, ரோவர் சாலையின் கிழக்கு பகுதி, ரோஸ்நகர், புதிய பஸ் நிலையத்தை ஒட்டிய வெங்கடாஜலபதி நகர், எம்.எம். நகர், அரணாரை போன்ற பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் ஓரளவு தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்கக்கூடிய நிலையில் உள்ளது. ஆனால் நகராட்சி பகுதியில் உள்ள 15-க்கும் மேற்பட்ட வார்டுகளில் கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவிவருகிறது. இந்நிலையில் நகராட்சி சார்பில் லாரி, டிராக்டர் மூலம் சுமார் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் பஞ்சம் நிலவும் இடத்திற்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு வினியோகிக்கப்படும் குடிநீர் போதுமானதாக இல்லை என்பதால் குடிநீரை பொதுமக்கள் காசு கொடுத்து வாங்கி குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தண்ணீர் பற்றாக்குறையை காரணத்தை காட்டி குடிநீர் கேன்களின் விலையும் அதிகரித்துள்ளது. குடிநீர் பற்றாக்குறையால் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் அம்மா குடிநீர் விற்பனை நிலையம் மூடப்பட்டுள்ளது.

இதனால் குடிநீர் கொண்டு வரும் லாரி, டிராக்டர் எப்போதும் வரும் என்று பல்வேறு இடங்களில் பொதுமக்கள் வழி மேல் விழி வைத்து குடங்களுடன் காத்து கிடப்பதை காண முடிகிறது. மேலும் குடிநீர் செல்லும் குழாயின் வால்வில் இருந்து வெளியேறும் தண்ணீர் குளம் போல் தேங்கி இருக்கும் இடங்களில் உள்ள தண்ணீரையும் எடுத்து செல்கின்றனர். இதனிடையே புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.யும், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத்தலைவருமான பாரிவேந்தர் தனது சொந்த செலவில் பெரம்பலூர் நகரில் குடிநீர் தட்டுப்பாடு உள்ள தெருக்களுக்கு டிராக்டர்கள், லாரிகள் மூலம் குடிநீர் வழங்கி வருவதை சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டுகின்றனர். இந்த நேரத்தில் நகராட்சி நிர்வாகமும், தெருக்குழாய்கள் மூலம் புழங்குவதற்கான தண்ணீரை மீண்டும் திறந்து விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story