காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் கைகொடுப்பதால், திண்டுக்கல்லில், 3 மாதங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது


காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் கைகொடுப்பதால், திண்டுக்கல்லில், 3 மாதங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது
x
தினத்தந்தி 22 Jun 2019 10:45 PM GMT (Updated: 22 Jun 2019 9:13 PM GMT)

‘காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் கைகொடுப்பதால் திண்டுக்கல்லில் இன்னும் 3 மாதங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது‘ என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாநகராட்சி கூட்ட அரங்கில், மாநகராட்சி பகுதிகள், ஊராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில் முறையாக குடிநீர் வழங்குவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதற்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் டி.ஜி. வினய், முன்னாள் மேயர் மருதராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், மாநகராட்சி மற்றும் ஊராட்சி, ஒன்றிய பகுதிகளுக்கு குடிநீர் வினியோக பணியில் ஈடுபடும் அதிகாரிகள், பொறியாளர்கள் கலந்துகொண்டனர். இதையடுத்து திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 48 வார்டு பகுதிகளிலும் முறையாக குடிநீர் வழங்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேட்டறிந்தார்.

மேலும் குடிநீர் பிரச்சினை தொடர்பாக இனிமேல் பொதுமக்கள் யாரும் போராட்டம் நடத்தாத அளவுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். கூட்ட முடிவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

திண்டுக்கல் மாநகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள் உள்ளன. இதில் 27 வார்டுகளுக்கு தினசரி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. 21 வார்டுகளுக்கு குடிநீர் பற்றாக்குறை காரணமாக ஒருநாள் விட்டு ஒருநாள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜிக்கா திட்டத்தின் கீழ் 7 வார்டுகளில் பதிக்கப்பட்ட குழாய்களில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அந்த வார்டுகளில் தற்போது குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

விரைவில் அந்த பிரச்சினை சரிசெய்யப்பட்டு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படும். தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. அதில் ரூ.110 கோடியை திண்டுக்கல் மாவட்டத்துக்கு ஒதுக்க கேட்டு வருகிறோம். அந்த நிதி கிடைத்தால் திண்டுக்கல் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்.

ஆத்தூர் காமராஜர் அணை அருகில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலமும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலமும் திண்டுக்கல் வார்டு பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் கைகொடுப்பதால் திண்டுக்கல்லுக்கு இன்னும் 3 மாதங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது.

இதேபோல் பொதுமக்களும் தேவைக்கு அதிகமாக குடிநீரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதுதொடர்பாக கலெக்டர் மூலம் அனைத்து பகுதி மக்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட உள்ளது. மேலும் மழைநீர் சேகரிப்பு திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது ஊராட்சிகள், ஒன்றிய பகுதிகளில் நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அந்த பிரச்சினைக்கும் தீர்வு காணப்பட்டு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story