உஷாரய்யா உஷாரு..


உஷாரய்யா உஷாரு..
x
தினத்தந்தி 23 Jun 2019 3:42 PM IST (Updated: 23 Jun 2019 3:42 PM IST)
t-max-icont-min-icon

அவள் பெற்றோருக்கு ஒரே மகள். சிறுமியாக இருந்தபோதே தந்தை குடும்பத்தைப் பிரிந்து சென்றுவிட்டார். அதனால் தாயாரின் பராமரிப்பில் வளர்ந்துவந்தாள். படித்துவிட்டு, தனியார் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணியாற்றிக்கொண்டிருக் கிறாள்.

அவள் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில், பக்கத்து வீட்டில் இன்னொரு குடும்பம் வசித்து வந்தது. அந்த குடும்பத்தில் இவள் வயதை ஒத்த மாணவன் ஒருவன் இருந்தான். நட்புரீதியாக இருவரும் பேசிக்கொள்வார்கள். அந்த குடும்பத்தினருக்கும்- இவளது தாயாருக்கும் நல்லபுரிதல் இருந்தது. அதனால் சொந்தபந்தம்போல் நெருக்கமாக பழகிக்கொண்டிருந்தார்கள்.

அவனும், அவளும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, கல்லூரியில் அடியெடுத்துவைத்தார்கள். அவன் பழகுவதற்கு இனிமையானவனாக இருந்தான். அவளுக்கு தேவையான உதவி களையும் செய்தான்.

அவள் கல்லூரி படிப்பை நிறைவு செய்யும் நேரத்தில், ‘பக்கத்து வீட்டு பையன் பழகுறதுக்கு நல்லவனாகவும், பண்புள்ளவனாகவும் இருக் கிறானே. அவனை மாதிரி ஒருத்தன் உனக்கு மாப்பிள்ளையாக கிடைத்தால் ஏற்றுக்கொள்வாய்தானே?’ என்று அம்மா கேட்க, அவளும் மறுப்பு ஏதும் சொல்லாமல் நட்பை தொடர்ந்து கொண்டிருந்த சூழலில், திடீரென்று அவனது தந்தைக்கு வேறு ஊருக்கு பணிமாற்றம் ஏற்பட்டது. அதனால் அந்த குடும்பமே வீட்டைக்காலிசெய்துவிட்டு போய்விட்டது. அதன் பின்பு ஒரு சில மாதங்களே அவன் தொடர்பில் இருந்தான். அவளும் அவனை மறந்துவிட்டாள்.

வருடங்கள் கடந்தன. அவள் படித்து முடித்துவிட்டு கல்லூரிப் பணியில் சேர்ந்துவிட்டாள். இந்த காலகட்டத்தில் அவளது தாயாரின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. உதவிக்கு ஆள் இன்றி அவளே மருத்துவமனைக்கும்- தனது வேலைக்குமாக பரபரப்புகாட்டி கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அவன் மீண்டும் வந்து அவளை சந்தித்தான். ‘அப்பா பணிபுரியும் ஊரிலே அம்மாவும் வசிப்பதாகவும், தனக்கு மட்டும் இந்த ஊரிலே ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைகிடைத்திருப்பதாகவும்’ சொன்னான். அவளது வீட்டுக்கு சற்று தொலைவிலே ஒரு அறை எடுத்தும் தங்கினான்.

அவனது திடீர் வருகை அவளுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. தாயாரின் உடல்நிலை அறிந்து மிகுந்த கவலைகொண்டான். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வது, மருந்துகள் வாங்கிக்கொடுப்பது போன்ற எல்லா உதவிகளையும் மனமுவந்து செய்தான். அப்போது நீண்ட நாட்களாக அவளது தாயாரை பிரபலமான தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கவேண்டிய சூழ்நிலை உருவானது. அதனால் நிறைய பணம் செலவாகிக்கொண்டிருந்தது. அவனே அடிக்கடி லீவு போட்டுவிட்டு மருத்துவமனையில் இருந்து கவனித்துக்கொண்டான். ஒவ்வொரு தேவைக்கும் தன்னிடம் பணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்க வேண்டாம் என்பதற்காக, நம்பிக்கையின் அடிப்படையில் தனது டெபிட் கார்டையும், கிரடிட் கார்டையும் அவனிடம் கொடுத்து, தேவைக்கு பணம்படுத்திக்கொள்ளச் சொன்னாள். தனது போனை பயன்படு்த்திக்கொள்ளவும் உரிமைகொடுத்திருந்தாள்.

தாயார் சிகிச்சைக்கு மத்தியில் அவனை அழைத்து, ‘நீ ரொம்ப நல்ல பையன். என் உடல்நிலை தேறிவந்ததும், உனது பெற்றோரை அழைத்துப் பேசி சம்மதம் வாங்கி உங்கள் இருவருக்கும் திருமணம் செய்துவைப்பேன்’ என்றார். அதற்கு அவன் எந்த மறுப்பும்சொல்லவில்லை.

கிட்டத்தட்ட மூன்று மாத மருத்துவ சிகிச்சைக்கு பிறகு தாயாரின் உடல்நிலை தேறியது. வீட்டிற்கு அழைத்துவந்தாள். அப்போது திடீரென்று அவன் காணாமல்போனான். செல்போன் தொடர்பிலும் சிக்கவில்லை.

அப்போது, கிரடிட் கார்டு பெற்றிருந்த வங்கியில் இருந்து அவளது செல்போனுக்கு, ‘வாங்கிய கடனை ஏன் ஒழுங்காக திருப்பிச்செலுத்தவில்லை?’ என்று கேள்விமேல் கேள்வி கேட்டனர். அவர்கள் சொன்ன கடன் விவரத்தை கேட்டவள் அதிர்ச்சியடைந்தாள். அவளது கார்டுக்கு அனுமதிக்கப்பட்ட ரொக்கம் முழுமையாக எடுக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு பொருட்களும் கார்டை பயன்படுத்தி வாங்கப்பட்டிருக்கிறது. டெபிட் கார்டில் இருந்தும் நிறைய பணம் எடுத்துள்ளான். அது தொடர்பான தகவல்களை எல்லாம் அவளது செல்போனில் இருந்து திட்டமிட்டு அழித்திருக்கிறான்.

அவன் சதிதிட்டத்தோடு வந்து சில லட்சங்களை அபகரித்துவிட்டு காணாமல் போயிருப்பது அவளுக்கு புரிந்தது. உடனடியாக வங்கிகளுக்கு தகவல்கொடுத்து பரிவர்த்தனையை நிறுத்தியிருக்கிறாள்.

அவனது மோசடியை பற்றி அவனது பெற்றோரிடம் சொல்லவேண்டும் என்று, தோழியையும் அழைத்துக்கொண்டு அந்த ஊரைத்தேடிச் சென்றவளுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. அவனுக்கு ஏற்கனவே திருமணமாகி, ஒரு குழந்தையும் இருந்தது. தன்னிடம் பண மோசடி செய்த விவரத்தை அவனது பெற்றோரிடம் சொன்னபோது, ‘அவன் இப்படி நிறைய பேரை ஏமாற்றி இருக்கிறான். பலர் தேடிவந்துகொண்டிருக்கிறார்கள். அவமானமாக இருக்கிறது. மனைவியையும், குழந்தையையும் தவிக்கவிட்டுவிட்டு எங்கே சென்றான் என்று தெரியவில்லை’ என்று கண்கலங்கினார்கள்.

வீட்டிற்கு திரும்பி வந்தாள். உண்மையை அம்மாவிடம் சொல்ல முடியவில்லை. அவன் சில லட்சங்களை அபகரித்துவிட்டு ஓடிவிட்டான் என்பதை அம்மாவிடம் சொன்னால் மீண்டும் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டுவிடும் என்பதால், உண்மையை சொல்லமுடியாமல் மனதுக்குள் புலம்பிக்கொண்டிருக்கிறாள்.

- உஷாரு வரும்.

Next Story