நிலத்தடிநீர் குறைந்ததால் தமிழகத்தில் 346 மில்லியன் லிட்டர் குடிநீர் தினமும் தட்டுப்பாடு; வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் தகவல்


நிலத்தடிநீர் குறைந்ததால் தமிழகத்தில் 346 மில்லியன் லிட்டர் குடிநீர் தினமும் தட்டுப்பாடு; வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் தகவல்
x
தினத்தந்தி 24 Jun 2019 11:15 PM GMT (Updated: 24 Jun 2019 7:16 PM GMT)

நிலத்தடிநீர் குறைந்ததால் தமிழகத்தில் தினமும் 346 மில்லியன் லிட்டர் குடிநீர் தட்டுப்பாடு இருப்பதாக குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குனர் மகேஸ்வரன் தெரிவித்தார்.

மதுரை,

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம், மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பஞ்சாயத்து மற்றும் டவுன் பஞ்சாயத்து உதவி இயக்குனர்கள், பொறியாளர்கள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர், தட்டுப்பாடின்றி அனைவருக்கும் குடிநீர் வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள குடிநீர் திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி பேசினார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஒப்பந்தகாரர்கள், தங்களுக்கான நிலுவை தொகை ஒரு ஆண்டுக்கு மேலாக இருக்கிறது. அதனை உடனே தர வேண்டும் என்று கேட்டனர். விரைவில் அந்த தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகேஸ்வரன் உறுதி அளித்தார். அதன்பின் மகேஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 556 குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்மூலம் தினமும் 4 கோடியே 23 லட்சம் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்கிறோம். ஒரு நாளைக்கு 2 ஆயிரத்து 146 மில்லியன் லிட்டர் குடிதண்ணீர் தேவை. ஆனால் பருவ மழை பொய்த்து போய், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து போனதால் 1,800 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. (அதன்படி தினமும் 346 மில்லியன் லிட்டர் குடிநீர் தட்டுப்பாடு ஆகிறது).

ஆற்றுபடுகையில் உள்ள குடிநீர் திட்டங்களில் எந்த பிரச்சினையும் இல்லை. மற்ற பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்துள்ளதால் தட்டுப்பாடு உள்ளது. இந்த பற்றாக்குறையை போக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

தண்ணீர் பிரச்சினைகளை தீர்க்கவும், திட்டங்களை துரிதப்படுத்தவும் 228 அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைத்து பகுதிகளுக்கும் சென்று குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்துகிறார்கள்.

குடிநீர் பிரச்சினையை சமாளிக்க அரசு ரூ.291 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் ரூ.20 கோடி லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்ய மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. குடிநீர் வடிகால் வாரியம் லாரிகளில் வினியோகம் செய்வது இதுவே முதல் முறை. ராமநாதபுரத்தில் 11 கிராமங்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். மற்ற மாவட்டங்களிலும் அந்தந்த கலெக்டர்களே இந்த திட்டத்தை செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

மின்சார பிரச்சினை ஏற்பட்டு இருந்தாலும் ஜெனரேட்டர் ஏற்பாடு செய்து அதன் மூலம் குடிநீர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். பழுதான ஆழ்குழாய் கிணறுகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. தண்ணீர் இருக்கும் இடங்களில் ஆழ்குழாய் கிணறுகளை புதிதாக அமைத்து வருகிறோம்.

தமிழகத்தில் பருவ மழை பொய்த்து போனதால், 17 மீட்டருக்கு கீழ் நிலத்தடிநீர் சென்றுவிட்டது. எதிர்கால சந்ததியினருக்கு சொத்து, கார் வாங்குவது மட்டும் முக்கியமல்ல. அவர்களுக்கு நீரை நாம் விட்டுச் செல்ல வேண்டும். விவசாய இடங்கள், தொழிற்சாலைகள், வீடுகள் என அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்பை செயல்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் எங்கு நீர் அதிக அளவு உள்ளது, எங்கு தட்டுப்பாடு என்பதனை கண்டறிந்து ஒரு ஆல்பம் தயாரித்து அனைத்து கலெக்டர் அலுவலகங்களிலும் வைத்திருக்கிறோம்.

மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 85 சதவீத அளவுக்கு குடிநீர் வினியோகம் செய்கிறோம். இந்த மாவட்டங்களில் 15 சதவீத அளவுக்குத்தான் தட்டுப்பாடு உள்ளது. உசிலம்பட்டிக்கு வைகை அணையில் இருந்து நேரடியாக தண்ணீர் எடுக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து அவரிடம் நிருபர்கள், ‘‘பல்வேறு குடிநீர் திட்டங்கள் குறித்து பட்டியலிடுகிறீர்கள். ஆனால் நிஜம் வேறு மாதிரியாக இருக்கிறது. குடிநீர் குழாய்கள் முன்பு நள்ளிரவையும் தாண்டி ஒரு குடம் நீருக்காக மக்கள் தவம் இருக்கின்றனர்‘‘ என்று கேட்டனர். அதற்கு அவர், ‘‘இந்த பிரச்சினையை தீர்க்கத்தான் நடவடிக்கை எடுத்து வருகிறோம்’’ என்றார்.

பேட்டியின் போது கலெக்டர் (பொறுப்பு) சாந்தகுமார், மாநகராட்சி கமி‌ஷனர் விசாகன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story