நிலத்தடி நீரை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்; நாராயணசாமியிடம் விவசாயிகள் வலியுறுத்தல்
நிலத்தடி நீரை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமியிடம் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.
புதுச்சேரி,
நாடாளுமன்ற தேர்தல் காரணமாக புதுவை சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதாவது ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய 5 மாதங்களுக்கு அரசின் செலவினங்களுக்கு சட்டசபையில் ஒப்புதல் பெறப்பட்டது.
தற்போது நாடாளுமன்ற தேர்தல் முடிந்துள்ள நிலையில் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முதல்–அமைச்சர் நாராயணசாமி திட்டமிட்டுள்ளார். இதற்காக பல்வேறு தரப்பினரிடமும் கருத்து கேட்க உள்ளார். கடந்த வாரம் துறை வாரியாக அமைச்சர்களையும், அதிகாரிகளையும் அழைத்து பேசினார்.
இந்தநிலையில் நேற்று வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்களை அழைத்து கருத்துகேட்டார். அப்போது அமைச்சர் கமலக்கண்ணனும் உடனிருந்தார். புதுச்சேரி, காரைக்கால் விவசாயிகள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
குறிப்பாக விவசாயிகள் நெல்லுக்கு உரிய மானியத்தொகையை உடனடியாக வழங்கவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் புதியதாக கடன் தருவதில்லை என்றும் தெரிவித்தனர்.
இயற்கை விவசாயத்தை அரசு ஊக்குவிக்கவேண்டும், நிலத்தடி நீரை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும், குறிப்பாக ஏரி, குளங்களை தூர்வார வேண்டும், நீராதார பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்று வலியுறுத்தினர். விவசாய விளை பொருட்களை விற்பனை செய்ய உழவர்சந்தைகள் சரியில்லாத நிலையில் விடுமுறை நாட்களில் நகரப்பகுதியில் பொதுவான இடம் ஒன்றை ஒதுக்கித்தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
காரைக்கால் விவசாயிகளுக்கு காவிரி நீர் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். பாசிக் உழவரகங்களை மூடக்கூடாது, விவசாய இடுபொருட்களை மானிய விலையில் வழங்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளையும் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.
அதன்பின் வர்த்தகர்களை அழைத்து பேசினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வர்த்தக சபை, வணிகர்கள் கூட்டமைப்பு, புதுவை மாநில தொழில், வர்த்தக சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அப்போது அவர்கள் சரக்கு மற்றும் சேவை வரிகளில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க மேல்முறையீட்டு அமைப்புகளை ஏரியா வாரியாக நியமிக்கவேண்டும், உள்ளாட்சி நிர்வாகிகள் சார்பில் போடப்பட்டுள்ள குப்பை வரி, சொத்துவரி அதிக அளவில் உள்ளது என்றும் அந்த பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
சுமை ஏற்றி இறக்கும் பிரச்சினை நிலவுவதாகவும், அதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும், டயர், பேட்டரி, டைல்ஸ் போன்றவற்றுக்கு சரக்கு மற்றும் சேவை வரியினை குறைக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.