பாகூரில் அனுமதிக்கப்பட்டு இருப்பதுபோல் அனைத்து ஏரிகளிலும் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை


பாகூரில் அனுமதிக்கப்பட்டு இருப்பதுபோல் அனைத்து ஏரிகளிலும் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 24 Jun 2019 10:45 PM GMT (Updated: 2019-06-25T01:11:53+05:30)

புதுவையில் பாகூரில் அனுமதிக்கப்பட்டு இருப்பது போல் வறண்டு கிடக்கும் மற்ற ஏரிகளிலும் மண் எடுக்க அனுமதிக்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாகூர்,

‘நீரின்றி அமையாது உலகு’ என்ற திருவள்ளுவரின் வாய்மொழிக்கு ஏற்ப நீரின் மகத்துவத்தை அனைவரும் தற்போது உணர தொடங்கியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து வருவதால் ஏரி, குளங்கள் தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்றன.

தண்ணீருக்கு தன்னிறைவு பெற்ற புதுவையிலேயே தட்டுப்பாடு உருவானது. இதற்கு புதுவையில் உள்ள 84 ஏரிகள் பல ஆண்டுகளாக தூர்வாராமல் இருப்பதுதான். மாநிலத்தின் பெரிய ஏரியான ஊசுட்டேரியில் தண்ணீர் வற்றி, வரலாறு காணாத வகையில் இந்த ஆண்டு கடும் வறட்சியை சந்தித்துள்ளது. 2-வது பெரிய ஏரியான பாகூர் ஏரி முழுமையாக வறண்டுபோய்விட்டது.

இந்த நிலையில் நீர்நிலைகளை பாதுகாக்கவும், பருவமழையின்போது தண்ணீரை சேமித்து வைக்கவும் ஏரி, குளங்களை தூர்வார அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக கொம்யூன் பஞ்சாயத்துகள் தோறும் சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடத்தி, குளங்கள், நீர்வழி பாதைகள் தூர்வார பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் மரக்கன்றுகள் நடவும் அறிவுறுத்தப்பட்டது. வறண்டுபோன பாகூர் ஏரியை தூர்வாரும் வகையில் அங்கு மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் தங்களுக்கு உரிய விளைநிலத்தின் ஆவணங்களை வில்லியனூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் சமர்ப்பித்து, மண் எடுப்பதற்கான உரிய அனுமதியை பெற்றுக்கொள்ளலாம்.

அதன்படி கடந்த சில நாட்களில் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சப்-கலெக்டர் அலுவலகத்தில் அனுமதிபெற்று பாகூர் ஏரியில் டிப்பர் லாரிகள் மூலம் மண் எடுத்து வருகின்றனர். இதற்கு கட்டணமாக ஒரு லோடுக்கு ரூ.150 வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் வளமான மண்ணை கொட்டி, விளைச்சலை அதிகரிக்க முடியும்.

விவசாய பயன்பாட்டுக்கு தவிர வேறு எதற்கும் மண் எடுக்க அனுமதி அளிக்கப்படவில்லை. ஏரி மண்ணை செங்கல்சூளை, கட்டுமானத்துக்கு முறைகேடாக பயன்படுத்துவதை தடுக்க தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் குழு கண்காணித்து வருகிறது.

ஏரியில் மண் எடுப்பது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

பாகூர் ஏரியை தூர்வாரும் நோக்கத்தில் அதிலிருந்து மண் எடுக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இங்கு திருக்கனூர், திருபுவனை, வில்லியனூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் மணல் எடுக்கவேண்டும் என்றால் டிப்பர் லாரி வாடகை, பொக்லைன் எந்திர வாடகை என செலவு அதிகம் ஆகிறது. எனவே ஒரு லோடுக்கு ரூ.150 என்பதை ரூ.50 ஆக குறைக்கவேண்டும். மேலும் அந்தந்த பகுதியில் வறண்டு கிடக்கும் ஏரிகளில் மண் எடுக்கவும் அனுமதிக்கவேண்டும். இதனால் பல ஏரிகள் தூர்வாரப்பட்டு, மழை காலத்தில் அதிகளவில் தண்ணீர் தேக்கி வைப்பதால் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். எனவே தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் அனைத்து ஏரிகளில் விவசாய பயன்பாட்டுக்கு மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Next Story