குமராட்சி அருகே, குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு


குமராட்சி அருகே, குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 25 Jun 2019 10:30 PM GMT (Updated: 26 Jun 2019 12:27 AM GMT)

குமராட்சி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

காட்டுமன்னார்கோவில், 

குமராட்சி அருகே உள்ள சர்வராஜன்பேட்டை கீழத்தெருவில் 75-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கூட்டுகுடிநீர் திட்டம் மற்றும் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் அங்குள்ள மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி பழுதானது. இதனால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அப்பகுதியில் உள்ள மற்றொரு மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக அங்கு புதிதாக குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிவடையாத காரணத்தால் இப்பகுதி மக்களுக்கு கடந்த சில மாதங்களாக சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இதனால் பொது மக்கள் காலி குடங்களுடன் அருகில் உள்ள ஊர்களுக்கும், விவசாய நிலங்களுக்கும் சென்று தண்ணீர் பிடித்து வந்ததால் அவர்கள் பெரும் சிரமப்பட்டு வந்தனர். இது குறித்து புகார் அளித்த பின்பும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குடிநீர்கேட்டு சர்வராஜன்பேட்டையில் உள்ள திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்த தகவலின் பேரில் குமராட்சி போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது குடிநீர் பிரச்சினையை தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

அதனை ஏற்று பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story