மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற கணவர் கைது கள்ளக்காதலை கைவிடாததால் கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம்


மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற கணவர் கைது கள்ளக்காதலை கைவிடாததால் கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 27 Jun 2019 4:45 AM IST (Updated: 27 Jun 2019 2:40 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர். மனைவி கள்ளக்காதலை கைவிடாததால் ஆத்திரத்தில் கொன்றதாக அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

பனமரத்துப்பட்டி,

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள நாழிக்கல்பட்டி கிராமம் வெடிகாரன் புதூரை சேர்ந்தவர் பாலசுப்ரமணி (வயது 45), மரம் அறுக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி தங்கமணி (37). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இதில் மகளுக்கு கடந்த ஆண்டு திருமணம் ஆகி விட்ட நிலையில், பாலசுப்ரமணி தனது மனைவி, மகனுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் தங்கமணி, தனது கணவரிடம் கோபித்துக்கொண்டு அருகில் உள்ள, தனது தந்தை வீட்டுக்கு சென்று விட்டார். இதனிடையே நேற்று முன்தினம் காலை பாலசுப்ரமணி தனது மாமனார் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த பாலசுப்ரமணி வீட்டில் இருந்த கத்தியால் தங்கமணியின் கழுத்தை அறுத்து உள்ளார். பின்னர் அங்கிருந்து ஓடி விட்டார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த தங்கமணியின் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து மல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆனந்தன் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய பாலசுப்ரமணியை வலைவீசி தேடி வந்தார். இந்த நிலையில் நேற்று தலைமறைவாக இருந்த பாலசுப்ரமணியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். அவர் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

எனது மனைவி கட்டிட வேலைக்கு சென்று வந்தார். அவ்வாறு அவர் வேலைக்கு செல்லும் போது, அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் எனது மனைவிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதை தெரிந்த நான் பலமுறை எனது மனைவியை கண்டித்ததுடன், கட்டிட வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறினேன்.

இதனால் வேலைக்கு செல்லாமல் அவர் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு எனக்கும், எனது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் அவர் கோபித்துக்கொண்டு அவரது தந்தை வீட்டுக்கு சென்று விட்டார். அதேநேரத்தில் நான் கட்டிட வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறியும் தொடர்ந்து அந்த நபருடன் வேலைக்கு சென்றார்.

இது எனக்கு பிடிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் எனது மாமனார் வீட்டுக்கு சென்றேன். அங்கு எனது மனைவி மட்டும் தனியாக இருந்தார். அவரிடம் நான் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறியும் ஏன் செல்கிறாய்? இனிமேல் வேலைக்கு செல்ல வேண்டாம். என்னுடன் குடும்பம் நடத்த வா என்று கூப்பிட்டேன்.

ஆனால் அதற்கு எனது மனைவி மறுத்ததுடன், அந்த நபருடன் தான் நான் வேலைக்கு செல்வேன் என்று கடுமையாக என்னிடம் பேசினார். ஒரு கட்டத்தில், எனது மனைவி என்னை விவாகரத்து செய்து விடுங்கள் நான் அவருடனே சென்று விடுகிறேன் என்று ஆத்திரத்தில் கூறினார். அதற்கு நான் கள்ளக்காதலை கைவிட முடியவில்லையா? என்று கூறி அவளிடம் சண்டை போட்டேன்.

அப்போது எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதில், ஆத்திரம் அடைந்த நான் அங்கு கிடந்த கத்தியை எடுத்து எனது மனைவியின் கழுத்தை அறுத்து விட்டேன். ரத்த வெள்ளத்தில் எனது மனைவி துடிப்பதை கண்ட நான் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன். பின்னர் போலீசாரிடம் மாட்டிக்கொண்டேன். இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

Next Story