மாவட்டத்தில் 5,062 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு முதன்மை செயலாளர் தகவல்


மாவட்டத்தில் 5,062 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு  முதன்மை செயலாளர் தகவல்
x
தினத்தந்தி 27 Jun 2019 11:54 PM GMT (Updated: 27 Jun 2019 11:54 PM GMT)

சேலம் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 62 முறையற்ற குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக அரசின் முதன்மை செயலாளர் முகமது நஜிமுதீன் தெரிவித்துள்ளார்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் குடிநீர் வழங்கும் பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும், தமிழக அரசின் எரிசக்தி துறை முதன்மை செயலாளருமான முகமது நஜிமுதீன் நேற்று ஆய்வு செய்தார். இதையொட்டி முதற்கட்டமாக அவர், ஓமலூர் ஒன்றியங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டார். பின்னர் அங்கு ஒரு ஆழ்துளை கிணற்றில் மழைநீரை சேமிப்பதற்கான பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து காமலாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தின் மேல்மாடியில் தேங்கும் மழைநீரை பள்ளி கிணற்றுக்குள் செலுத்தும் வகையில் குழாய் பதிக்கப்பட்ட பணிகளையும், மஜ்ரா கொல்லப்பட்டியில் பயனற்ற அடிபம்பு வழியாக ஆழ்துளை கிணற்றில் மழைநீர் சேமிக்கும் பணியையும் ஆய்வு செய்தார்.

இதுதவிர, காமலாபுரம் ஊராட்சியில் திறந்தவெளி கிணற்றில் உள்ள நீரினை சுத்தப்படுத்தி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மறுபுனரமைப்பு செய்யப்பட்ட ஆழ்துளை கிணற்றில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புக்கான பணிகள் குறித்து முதன்மை செயலாளர் முகமது நஜிமுதீன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வினியோகம் செய்ய அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் என்றும், வறட்சி உள்ள பகுதிகளில் புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அரசு முதன்மை செயலாளர் முகமது நஜிமுதீன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. சேலம் மாவட்டத்தில் மொத்தம் 104 வாகனங்கள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. தொடர்ந்து 4 மாதங்களுக்கு குடிநீர் பிரச்சினை வராத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடிநீர் பிரச்சினை தொடர்பாக பெரிய அளவில் புகார் எதுவும் வரவில்லை. மழைநீர் சேகரிப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். வருங்காலங்களில் என்னென்ன? நடவடிக்கை தேவை என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.

நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றவும், ஏரி, குளங்கள், ஓடைகள் தூர்வாரவும் நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் பிரச்சினையை தீர்க்க அரசு மட்டும் நடவடிக்கை எடுத்தால் தீர்வு காணமுடியாது. எனவே, பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். ஆகவே பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

தடையின்றி குடிநீர் வழங்குவதற்காக சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு சிறப்பு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பொதுமக்கள் குடிநீர் வினியோகம் தொடர்பான புகார்கள் மற்றும் விவரங்களை தெரிவிப்பதற்காக கட்டணமில்லா தொலைபேசி சேவை மையம் கலெக்டர் அலுவலகத்தில் தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. 5 ஆயிரத்து 13 முறையற்ற வீட்டு குடிநீர் இணைப்புகளும், 49 முறையற்ற வணிக குடிநீர் இணைப்புகளும் கண்டறியப்பட்டு மொத்தம் 5 ஆயிரத்து 62 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

குடிநீர் ஆதாரம் உள்ள 601 பழைய ஆழ்துளை கிணறுகளும், 273 திறந்தவெளி கிணறுகளும், 8 இதர இடங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 66 பழைய ஆழ்துளை கிணறுகளும், 66 திறந்த வெளி கிணறுகளும் சீர் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அரசு முதன்மை செயலாளர் முகமது நஜிமுதீன் கூறினார்.

பேட்டியின்போது, கலெக்டர் ரோகிணி, திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story