சர்வதேச ரோட்டரி அறக்கட்டளைக்கு ரூ.7 லட்சம் நிதி உதவி கும்பகோணம் மகாமகம் ரோட்டரி சங்கம் வழங்கியது


சர்வதேச ரோட்டரி அறக்கட்டளைக்கு ரூ.7 லட்சம் நிதி உதவி கும்பகோணம் மகாமகம் ரோட்டரி சங்கம் வழங்கியது
x
தினத்தந்தி 2 July 2019 4:15 AM IST (Updated: 2 July 2019 12:53 AM IST)
t-max-icont-min-icon

சர்வதேச ரோட்டரி அறக்கட்டளைக்கு கும்பகோணம் மகாமகம் ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.7 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.

கும்பகோணம்,

கும்பகோணம் மகாமகம் ரோட்டரி சங்கத்தின் 2019-20-ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. அதன்படி சங்க தலைவராக மதிவாணன், செயலராக சந்திரசேகர், பொருளாளராக சிவகுருநாதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதையொட்டி பதவியேற்பு விழா கும்பகோணம் பாலாஜி மகால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் ஏ.மணி கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவிபிரமாணம் செய்து வைத்தார். நிதி ஆலோசகர் வி.நாகப்பன், துணை ஆளுநர் கலைச்செல்வன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

நினைவு பரிசு

விழாவில் அரசு பொதுத்தேர்வில் மாணவர்களை அதிக மதிப்பெண்கள் வாங்க ஊக்குவித்த 10-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் கும்பகோணம் நகராட்சிக்குட்பட்ட பூங்காக்களை பராமரிக்கும் தோட்ட பராமரிப்பாளர்கள் 6 பேருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும், தையல் எந்திரங்கள், மாற்று திறனாளிக்கு சைக்கிள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ரூ.7 லட்சம்

கும்பகோணம் மகாமகம் ரோட்டரி சங்கம் சார்பில் சர்வதேச ரோட்டரி அறக்கட்டளைக்கு பல்வேறு நலத்திட்ட பணிகளுக்காக ரூ.7 லட்சம் நிதிஉதவி வழங்கப்பட்டது. சங்கத்தின் மேஜர் டோனர் பிரீமியர் சவுந்தர்ராஜன் நிதியளித்து பணிகளை தொடங்கி வைத்தார்.

விழாவில் கும்பகோணத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், பல்வேறு ரோட்டரி சங்க நிர்வாகிகள், தன்னார்வ சங்க பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். விழா ஏற்பாடுகளை கும்பகோணம் மகாமகம் ரோட்டரி சங்க அலுவலர், அமைப்பின் நிர்வாகிகள் செய்திருந்தனர். 

Next Story