முன்னாள் ராணுவ வீரர் வீடு உள்பட 2 வீடுகளில் ரூ.10 லட்சம் நகை - பணம் கொள்ளை


முன்னாள் ராணுவ வீரர் வீடு உள்பட 2 வீடுகளில் ரூ.10 லட்சம் நகை - பணம் கொள்ளை
x
தினத்தந்தி 3 July 2019 11:00 PM GMT (Updated: 3 July 2019 3:16 PM GMT)

பள்ளிகொண்டா அருகே முன்னாள் ராணுவ வீரர் உள்பட 2 பேர் வீடுகளில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நகை - பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அணைக்கட்டு,

பள்ளிகொண்டாவை அடுத்த அகரம்சேரி அருகே உள்ள காளப்பதூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 68). முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். 2 மகன்களும் சென்னை போரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். மகன்களை பார்ப்பதற்காக ராஜாராம் மனைவி சித்ராவுடன் கடந்த மாதம் 9-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்கு சென்றார்.

இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி இரவு மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க இரும்பு கேட்டை உடைத்து உள்ளே சென்று 3 பீரோவில் இருந்த 29 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதேபோல ராஜாராம் வீட்டின் எதிர் வீட்டில் வசிப்பவர் தினகரன் (62). மத்திய பாதுகாப்பு படையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவரது மகன் அரவிந்த் சென்னை கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மேலாளராக உள்ளார். மகன் மற்றும் பேரக்குழந்தையை பார்ப்பதற்காக தினகரன் தனது மனைவி சாவித்திரியை அழைத்துக்கொண்டு கடந்த 1-ந் தேதி சென்னைக்கு சென்றார். எதிர் வீட்டில் கொள்ளை நடந்த அன்றே இவரது வீட்டின் முன்பக்க இரும்பு கேட்டையும், மரக்கதவையும் மர்ம நபர்கள் உடைத்துவிட்டு வீட்டில் இருந்த 17 பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளை யடித்து சென்றுள்ளனர். மேலும் அவர்கள் யாருக்கும் சந்தேகம் வராதபடி கொள்ளையடிக்கப்பட்ட 2 வீடுகளின் இரும்பு கேட்டையும் பூட்டியது போல் செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். 2 வீடுகளிலும் கொள்ளைபோன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் இருக்கும்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அந்த பகுதியில் பலத்த காற்று வீசியதால் ராஜாராம் வீட்டின் இரும்பு கதவு திறந்து கொண்டது. அப்போது அந்த வழியாக சென்றவர்கள் கதவு திறந்திருந்ததை பார்த்து வீட்டில் உள்ளவர்களை அழைத்துள்ளனர். ஆனால் யாரும் வெளியே வரவில்லை. இதனையடுத்து அவர்கள் அந்த பகுதியில் இருந்தவர்களிடம் விசாரித் துள்ளனர். அப்போது ராஜாராம் குடும்பத்துடன் சென்னைக்கு சென்றிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து ராஜாராம் உறவினர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோக்கள் உடைக்கபட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்தவர்கள் தினகரன் வீட்டின் இரும்பு கேட்டும் உடைக்கபட்டிருப்பதை பார்த்தனர். பின்னர் அவர்கள் அவரது வீட்டிற்குள்ளேயும் சென்று பார்த்த போது அங்கும் பீரோக்கள் உடைக்கப்பட்டு இருந்தன.

இதுகுறித்து சென்னையில் உள்ள இரு வீட்டாருக்கும் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

நேற்று காலை ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம், வேலூர் தடயவியல் நிபுணர் ஸ்ரீதர் மற்றும் அவரது குழுவினர் கொள்ளை நடந்த 2 வீடுகளுக்கு சென்று தடயங்களை சேகரித்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story