தேன்கனிக்கோட்டை அருகே நீர் மேலாண்மை திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு


தேன்கனிக்கோட்டை அருகே நீர் மேலாண்மை திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 4 July 2019 11:00 PM GMT (Updated: 4 July 2019 4:56 PM GMT)

தேன்கனிக்கோட்டை அருகே மேற்கொள்ளப்பட்டு வரும் நீர் மேலாண்மை திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பெட்டமுகிளாலம் ஊராட்சிகுட்பட்ட கம்பளம் கிராமத்தில் ரூ. 4 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர் மேலாண்மை திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் டாக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது குறித்து கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடிநீர் பணிகள் மற்றும் மழை நீரை சேமிக்கும் பொருட்டு பல்வேறு கட்டமைப்புகளுக்காக ரூ. 15 கோடி நிதி ஒதுக்கீடு செய்து எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதேபோல அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக பல்வேறு குடிநீர் மேம்பாட்டு பணிகள் மற்றும் ஏரி குளங்கள் தூர்வாரும் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி மலைகிராமமான கம்பளம் கிராமத்தில் ரூ. 4 கோடி மதிப்பில் 27 புதிய தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை மேற்கொண்டு தற்போது 6 தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தடுப்பணையிலும் சுமார் 5 லட்சம் லிட்டர் தண்ணீர் சேமிக்க முடியும். அதுமட்டுமல்லாமல் தலா ரூ. 10 ஆயிரம் வீதம் 2 கிணறு உறிஞ்சு குழி பணிகள், தலா ரூ.15 ஆயிரம் மதிப்பில் 20 மண்புழுஉரம் தொட்டி பணிகளையும், ரூ. 12 ஆயிரம் மதிப்பில் 2 பண்ணை குட்டைகள் தூர்வாரும் பணிகளையும் மற்றும் கோடை உழவு பணிகள் சுமார் 750 ஏக்கர் அளவிற்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோல கோட்டையூர் கொல்லை பகுதிக்கு ரூ. 10 லட்சம் மதிப்பில் திறந்த வெளிகிணறு அமைத்து மின் மோட்டார் அமைக்கவும், காளிகட்டம் பகுதிக்கு ரூ. 10 லட்சம் மதிப்பில் திறந்த வெளி கிணறு அமைத்து மின் மோட்டார் அமைக்கவும், ஊராட்சி நடுநிலைப்பள்ளிக்கு ரூ. 4 லட்சம் மதிப்பில் கழிப்பறை கட்டும் பணிகளும் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து புதியதாக கட்டி முடிக்கப்பட்ட தடுப்பணை பணிகளையும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களின் குடிநீர் வசதி மற்றும் மதிய உணவு திட்ட பணிகளையும், கழிப்பறைகள் கட்டப்பட உள்ள பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் நபார்டு திட்ட உதவி பொது மேலாளர் நஸ்ரீன் சலீம், மையராடா திட்ட இயக்குநர் அரவிந் ஜி ரிஸ்புட், வீட்டு வசதி குழுமம் கள இயக்குநர் நந்த கிஷோர், ஓசூர் உதவி கலெக்டர் குமரேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், தாசில்தார் பாலசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹேமலதா, இந்துமதி, ஒன்றிய பொறியாளர் விமலா, ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story