நீர்நிலைகளின் கரைகளை உடைத்து, மண் திருடுபவர்கள், துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை - கலெக்டர் உமா மகேஸ்வரி பேட்டி
நீர்நிலைகளின் கரைகளை உடைத்து மண் திருடுபவர்கள் மீதும், அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உமா மகேஸ்வரி கூறினார்.
கீரமங்கலம்,
கீரமங்கலம் அருகே மேற்பனைக்காடு கிராமத்தில் உள்ள பெரிய குளம் ஏரியில் குடிமராமத்து பணிகள் செய்ய ரூ.70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த பணியை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி நேற்று தொடங்கி வைத்து, பணிகளை செயல்படுத்தும் விதம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதில் கல்லணை கோட்ட அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், அறந்தாங்கி தாசில்தார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு ஏரியில் குடிமராமத்து பணிக்காக பல ஆண்டுகளுக்கு பிறகு நிதி ஒதுக்கீடு செய்துள்ள தமிழக அரசுக்கு நன்றி கூறினார்கள்.
பின்னர் கலெக்டர் உமா மகேஸ்வரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிமராமத்து பணிகளுக்காக 66 ஏரிகள் மற்றும் குளங்கள் சீரமைக்கும் பணிக்கு ரூ.20 கோடியே 27 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இதில் கல்லணை கோட்டத்தில் 4 பணிகளுக்காக ரூ.1 கோடியே 88 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
பெரிய குளம் ஏரியில் நடைபெறும் பணியில் கரைகளை பலப்படுத்துவதுடன் வரத்து வாய்க்கால்களை சீரமைப்பது, மடைகளை சீரமைப்பது போன்ற பணிகள் செய்யப் படுகிறது. ஆயக்கட்டுதாரர்களே இந்த பணிகளை செய்கிறார்கள். மேலும் இந்த ஏரியில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளும் முழுமையாக அகற்றி சீரமைக்க வேண்டும். ஒரு சில கிராமங்களில் விவசாயிகள் பயனடைய குளங்களில் மண் எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் பல குளங்களில் அதிக ஆழத்திற்கு குழிகள் வெட்டி இருப்பதாக தகவல்கள் வருகிறது. அந்த இடங்களை கண்காணித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். நீர்நிலைகள், வரத்து வாய்க்கால்களின் கரைகளை உடைத்து மண் திருடுபவர்கள் மீதும், அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மனு கொடுத்தால் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story