தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது குடிமைப்பொருள் டி.ஜி.பி. பிரதீப் வி.பிலிப் பேட்டி


தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது குடிமைப்பொருள் டி.ஜி.பி. பிரதீப் வி.பிலிப் பேட்டி
x
தினத்தந்தி 5 July 2019 10:30 PM GMT (Updated: 5 July 2019 8:27 PM GMT)

தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது என்று குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு துறை டி.ஜி.பி. பிரதீப் வி.பிலிப் கூறினார்.

நெல்லை, 

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் பிரண்ட் ஆப் மாணவர் குழு தொடங்கி வருகிறோம். தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்டம் போல் இதுவும் ஒரு மாணவர் குழு ஆகும். இதில் சேரும் மாணவர்களுக்கு தலைமைப்பண்பு, தகுதி, நல்லொழுக்கம் வளரும். இதே போல் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் குழு தொடங்குவதற்கு முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

ரேஷன் அரிசி கடத்தல் முன்பு போல் இல்லை, தற்போது குறைந்து உள்ளது. இதை தடுக்க பல்வேறு நடவடிக்கை, கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளோம். அதில் ஒரு புதிய முயற்சியாக கடத்தல்காரர்கள் முக்கியமான அதிகமான குற்றம் செய்தோர் பட்டியலை எடுத்து கண்காணித்து வருகிறோம். மேலும் அவர்களை உதவி கலெக்டர் முன்னிலையில் ஆஜர்படுத்தி எழுதி வாங்குகிறோம். அதை மீறி குற்றம் செய்தால் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கலாம்.

இதுதவிர கடத்தலை தடுக்க ஓய்வு பெற்றோர் மற்றும் லாரி உரிமையாளர்கள், பொது மக்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் அடங்கிய குழு அமைத்துள்ளோம். அவர்களிடம் ஆலோசனை கேட்டு அந்த குழு மூலம் தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகிறோம். பெரிய லாரிகளில் மட்டும் ரேஷன் அரிசி கடத்தல் நிலை மாறி, தற்போது சின்ன, சின்ன வாகனங்களில் கடத்தல் முயற்சிகள் நடக்கிறது. ஆனால் ரேஷன் அரிசி உள்ளிட்ட குடிமை பொருட்கள் கடத்தல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அவர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவர்களை கொண்ட பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை தொடங்கி வைத்தார்.

Next Story