சிவகங்கை அருகே பரிதாபம்; கார் - மோட்டார் சைக்கிள் மோதல்; சகோதரர்கள் பலி


சிவகங்கை அருகே பரிதாபம்; கார் - மோட்டார் சைக்கிள் மோதல்; சகோதரர்கள் பலி
x
தினத்தந்தி 6 July 2019 4:15 AM IST (Updated: 6 July 2019 3:44 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை அருகே கார்- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் அண்ணன், தம்பி பரிதாபமாக இறந்தனர்.

கல்லல்,

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்துள்ள பூலாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னையா. இவருடைய மகன்கள் பாகன்பூசாரி (வயது 27), சின்னக்கருப்பு (19). இவர்கள் இருவரும் விவசாயி கூலி வேலை செய்து வந்தனர். இந்தநிலையில் சிவகங்கையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பாகன்பூசாரி ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பித்து இருந்தார். நேற்று ஓட்டுனர் உரிமத்தை வாங்குவதற்காக அவரும், சின்னக்கருப்பும் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்ற அவர்கள், அங்கிருந்து ஓட்டுனர் உரிமத்தை பெற்றுக் கொண்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். வாகனத்தை பாகன்பூசாரி ஓட்டி சென்றார். ஒக்கூர், மதகுபட்டிக்கிடையே உள்ள 10 கண்பாலம் அருகே வந்த போது, எதிரே காரைக்குடியில் இருந்து சிவகங்கைக்கு சென்ற கார் எதிர்பாராத நிலையில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

அதில் சகோதரர்கள் ரோட்டின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டனர். அதில் 2 பேரும் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தனர். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்சை வரவழைத்தனர். அதில் காயமடைந்தவர்களை சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் வழியிலேயே சின்னக்கருப்பு பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாகன்பூசாரி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சீராளன், மதகுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் வாசிவம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story