கரூர் பழைய அமராவதி பாலத்தில் பூங்கா அமைக்கும் பணிகள் தொடக்கம் போக்குவரத்து மாற்றம்


கரூர் பழைய அமராவதி பாலத்தில் பூங்கா அமைக்கும் பணிகள் தொடக்கம் போக்குவரத்து மாற்றம்
x
தினத்தந்தி 7 July 2019 4:15 AM IST (Updated: 7 July 2019 1:22 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் வரலாற்று சிறப்பு மிக்க பழைய அமராவதி பாலத்தில் பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பாலத்தின் வழியே போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், மாற்று பாதையில் வாகனங்கள் செல்கின்றன.

கரூர்,

சேர, சோழ, பாண்டியர்கள், விஜயநகர நாயக்கர்கள், மைசூர் அரசர்கள் உள்ளிட்டோர் கரூரை முக்கிய வணிகத்தலமாக கொண்டு அந்த காலத்தில் ஆட்சி செய்த சிறப்பு உண்டு. அதற்கு ஆதாரமாக கரூர் அமராவதி ஆற்றங்கரையில் ரோமானிய நாணயங்கள் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும். அந்த வகையில் ஆங்கிலேயேரின் ஆட்சி காலத்தில் மாட்டு வண்டி, குதிரை வண்டி, ரிக்‌ஷா உள்ளிட்டவற்றில் போக்குவரத்தினை மேற்கொள்ளவும், மக்கள் கரூர் லைட்அவுஸ் கார்னர் அமராவதி ஆற்றினை கடந்து செல்ல வசதியாகவும் பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. பின்னர் 1919-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு, பாலப்பணிகள் நடந்தன. அப்போது ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் பெரியளவில் இல்லாததால் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக அவ்வப்போது பாலப்பணிகள் தடைப்பட்டன. எனினும் செங்கல், சுண்ணாம்புக்கலவை, கருங்கற்கள் உள்ளிட்டவை மூலம் தொழிலாளர்களின் அயராத உழைப்பு 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணிகள் நடைபெற்றது. பின்னர் 1924-ல் பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா கண்டது. அப்போது அந்த பாலத்திற்கு, சுதந்திர போராட்ட தியாகி “தேசிகாச்சாரியின்“ பெயர் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.

பல்வேறு வெள்ளங்களை சந்தித்த இந்த பாலம் தற்போதும் கூட கம்பீரமாக காட்சி தருகிறது. . இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கரூர் நகரின் போக்குவரத்து நெருக்கடி உள்ளிட்டவற்றை காரணம் காட்டி லைட்அவுஸ் கார்னரில் புதிதாக அமராவதி ஆற்று பாலம் கட்டப்பட்டு, ஒரே நேரத்தில் 2 சாலைகளில் வாகனங்கள் சென்று வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் கரூர் நகரில் பொழுது போக்கிற்காக வசதிகள் ஏதும் இல்லை என்கிற பொதுமக்களின் ஏக்கத்தினை போக்கும் வகையில் திருமாநிலையூர் பழைய அமராவதி பாலத்தில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். அந்த வகையில் பூங்கா அமைக்கும் பணிக்காக கரூர் வைஸ்யா வங்கி சார்பில் ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பூங்காவில் பொழுது போக்கு உபகரணங்கள் வைப்பது உள்ளிட்டவை தொடர்பாக பாலத்தினை அளவீடு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதனால் அந்த பாலம் வழியாக போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் மாற்றுப்பாதையில் செல்லவும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. அங்கு இரும்பு தடுப்பு வேலிகள் அமைத்து, எந்த வாகனமும் அந்த பாலத்தில் செல்ல முடியாத வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாற்றுப்பாதையில் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் அந்த பாலத்தின் சாலையை தோண்டும் பணிகள் நடந்தன. விரைவில் அடுத்தடுத்த பணிகளை மேற்கொண்டு சில மாதங்களில் பூங்கா மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

திருமாநிலையூர் பழைய பாலமானது இன்னும் சில ஆண்டுகள் சென்றால், நூற்றாண்டை கடந்த பாலம் என்கிற சிறப்பினை பெற வாய்ப்புள்ளது. அப்படி இருக்கையில் அந்த பாலத்தின் கல்வெட்டு ஆதாரங்கள் சிதில மடைந்து மண்மூடி காட்சி யளிப்பது சமூக ஆர்வலர்களிடையே வேதனை தரும் விஷயமாக உள்ளது. பூங்கா அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தாலும், பாலத்தின் பழமையான வரலாற்றினை அடுத்த சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும் எனில், அதன் கல்வெட்டு ஆதாரங்களை பராமரிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் அமராவதி பழைய பாலத்தின் அருகே நீர்செல்லும் கிளை வாய்க்கால் புதர்மண்டியுள்ளது. எனவே அதனை தூர்வாரி பாசனத்திற்கு நீர் செல்லும் வகையில் வழிவகை செய்ய வேண்டும். மேலும் ஆற்று பாலத்தில் பூங்கா இருப்பதால் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story