குத்தாலம் அருகே கோஷ்டி மோதல்: கார் கண்ணாடி உடைப்பு; சகோதரர்கள் உள்பட 7 பேர் கைது


குத்தாலம் அருகே கோஷ்டி மோதல்: கார் கண்ணாடி உடைப்பு; சகோதரர்கள் உள்பட 7 பேர் கைது
x
தினத்தந்தி 9 July 2019 3:45 AM IST (Updated: 9 July 2019 12:21 AM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் அருகே கோஷ்டி மோதலில் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக சகோதரர்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 5 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

குத்தாலம்,

நாகை மாவட்டம், குத்தாலம் அருகே கண்டியூர் கிராமம் புதுத்தெருவை சேர்ந்த தியாகராஜன் மகன் திவாகர் (வயது 23). வில்லியநல்லூர் மெயின்ரோட்டை சேர்ந்த ராஜசேகர் மகன் பவித்திரன் (25). சம்பவத்தன்று குத்தாலம் அஞ்சாறுவார்த்தலை கடைவீதியில் வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான பெட்டி கடையில் பொருள் வாங்குவதற்காக திவாகர் தனது நண்பர் சிவா என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பவித்திரன் மீது மோதுவதுபோல திவாகர் சென்றதாக தெரிகிறது. இதனால் திவாகருக்கும், பவித்திரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இதனை கண்ட பவித்திரனின் நண்பர்கள் அருள்சக்தி, மகேந்திரன், பூபதி ஆகியோர் சேர்ந்து திவாகர், சிவா ஆகியோரை உருட்டு கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் முடிந்த சில மணிநேரத்தில் பவித்திரன், அவரது தாய் கலாவதியுடன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திவாகர் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து பவித்திரனை உருட்டு கட்டையால் தாக்கினார். மேலும் பவித்திரனின் தாய் கலாவதியையும் தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. கோஷ்டி மோதலில் காயம் அடைந்த 2 பேரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கைது

இதுகுறித்து திவாகர் கொடுத்த புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பவித்திரன், அதே பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி மகன்கள் பவுன்மூர்த்தி (32), அருள்சக்தி (30), பூபதி (56) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மணி மகன் மகேந்திரன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதேபோல் கலாவதி கொடுத்த புகாரின்பேரில் போலீசார், ஜவகர் (28), ஸ்ரீதர் (23) ஆகிய 2 பேரை கைது செய்தனர். வழக்கு தொடர்பாக திவாகர், சிவா, சுரேஷ் ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.

இருதரப்பினர் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மேலும் பிரச்சினைகள் ஏற்படாத வகையில் அஞ்சாறுவார்த்தலை பகுதியில் மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கார் கண்ணாடி உடைப்பு

இந்த நிலையில் கோஷ்டி மோதலில் கைது செய்யப்பட்ட அருள்சக்தி, பவுன்மூர்த்தி ஆகியோரின் சகோதரர்கள் பல்லவன் (36), ஆறுமுகம் ஆகிய 2 பேரும் சேர்ந்து தங்களது தம்பிகள் கைது செய்யப்பட்டதற்கு, குத்தாலம் அஞ்சாறுவார்த்தலை மெயின்ரோட்டை சேர்ந்த விஜயகாந்த் (37) என்பவர் தான் காரணம் என்று கூறி அவர் சென்ற காரை வழிமறித்து உருட்டு கட்டையால் அடித்து நொறுக்கினர். இதில் கார் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தது.

இதுகுறித்து விஜயகாந்த் கொடுத்த புகாரின்பேரில் குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்லவனை கைது செய்தனர். மேலும் ஆறுமுகத்தை தேடி வருகின்றனர். 

Next Story