திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையம் சிறந்ததாக தேர்வு ஐ.ஜி.பினரேந்திரகுமார் கேடயம் வழங்கினார்


திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையம் சிறந்ததாக தேர்வு ஐ.ஜி.பினரேந்திரகுமார் கேடயம் வழங்கினார்
x
தினத்தந்தி 9 July 2019 11:00 PM GMT (Updated: 9 July 2019 6:32 PM GMT)

தெற்கு ரெயில்வேயில், சிறந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையம் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டு அதற்கான கேடயத்தை ஐ.ஜி.பினரேந்திரகுமார் வழங்கினார்.

திருச்சி,

தமிழ்நாடு, கேரளாவுக்கு சென்னையை தலைமையிடமாக கொண்டு தெற்கு ரெயில்வே நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இரு மாநிலங்களிலும் 106 ரெயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்.) போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் சிறந்த ஆர்.பி.எப். போலீஸ் நிலையம் தேர்வு செய்யப்பட்டு, அவற்றுக்கு ‘பெஸ்ட் கிப்ட் போஸ்ட்’ விருது வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 2018-19-ம் ஆண்டுக்கு திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையம் தேர்வு செய்யப்பட்டு, சென்னையில் நேற்று முன் தினம் நடந்த விழாவில் தெற்கு ரெயில்வே போலீஸ் ஐ.ஜி.யும் முதன்மை பாதுகாப்பு படை ஆணையருமான பினரேந்திரகுமார் கேடயமும், சான்றிதழும் வழங்கினார். அதனை திருச்சி ஆர்.பி.எப். இன்ஸ்பெக்டர் சுஜிக்குமார் ராய் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் ரெயில்வே டி.ஐ.ஜி. அருள்ஜோதி உள்ளிட்ட ரெயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனர். தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட ஆர்.பி.எப். எல்லையில் ரெயில்வே பொருட்கள் திருட்டு, திருடர்களை கண்டறிதல், ரெயில்வே உரிமைக்கோரல் வழக்குகள் கையாளுதல், ஆர்.பி.எப். போலீஸ் நிலையத்தை சுத்தமாக பராமரித்தல், ஆவணங்களை பராமரித்தல், ரெயில்வே தீர்ப்பாயத்தில் வழக்குகளை உரிய காலத்தில் முடித்தல் ஆகியவற்றுக்காக தேர்வு செய்யப்பட்டு கேடயம் பரிசாக பெற்றது.

விழிப்புணர்வு

கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் 3,036 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரெயில்வே சட்டத்தின்கீழ் ரூ.11 லட்சத்து 46 ஆயிரத்து 400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 824 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரெயில்வே தீர்ப்பாயம் மூலம் ரூ.3 லட்சத்து 45 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் உத்தமர்கோவில் ரெயில் நிலையங்களுக்கு இடையே அடிக்கடி ரெயில்களின்மீது கல்வீச்சு சம்பவத்தால் பயணிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக திருச்சி ஆர்.பி.எப். சார்பில் பள்ளி, கல்லூரிகளில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆர்.பி.எப். ஊழியர்கள் மூலம் ஒலிபெருக்கி வைத்து ரெயில்களில் படிக்கட்டில் பயணம் செய்யக்கூடாது என்றும், ஆபத்தான நேரங்களில் ரெயில்களின் உள்ள அபாய சங்கிலியை இழுத்து விபத்தை தவிர்ப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ரெயில்வேக்கு சொந்தமான பொருட்களை திருடியதாக மட்டும் 2018-ம் ஆண்டில் 16 பேர் மீது ரெயில்வே சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த ஆண்டில் (2019) இதுவரை 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 5 பேரிடம் இருந்து ரெயில்வே சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. பேரிடர் மேலாண்மைக்குழு அமைக்கப்பட்டு, அக்குழு ஆர்.பி.எப். எல்லைக்குட்பட்ட பகுதியில் சூழ்நிலைக்கு தகுந்தவாறு பணி செய்து வருகிறார்கள்.

கண்காணிப்பு கேமரா

திருச்சி ரெயில் நிலையப்பகுதியில் பயணிகள் மற்றும் திருடர்களை கண்காணிக்கும் வகையில் 67 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. அவற்றில் இதுவரை 25 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 13 கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. மேலும், கடந்த 2018-ம் ஆண்டில் ரெயில் நிலையங்களில் கேட்பாரற்று சுற்றித்திரிந்த சிறுவர், சிறுமிகள் 238 பேர் மீட்கப்பட்டு குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் இதுவரை 119 சிறுவர், சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் திருச்சி ஆர்.பி.எப். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித்குமார்ராய் தெரிவித்தார்.

Next Story