போதிய தொழிலாளர்கள் இல்லாமல் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி பாதிப்பு; 30 சதவீதம் விலை உயர வாய்ப்பு


போதிய தொழிலாளர்கள் இல்லாமல் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி பாதிப்பு; 30 சதவீதம் விலை உயர வாய்ப்பு
x
தினத்தந்தி 10 July 2019 4:45 AM IST (Updated: 10 July 2019 1:14 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி பகுதியில் போதிய பட்டாசு தொழிலாளர்கள் இல்லாததால் பட்டாசு உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சிவகாசி,

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முக்கிய தொழில்களில் ஒன்று பட்டாசு தயாரிப்பு. சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், வெம்பக்கோட்டை ஆகிய தாலுகாவில் மட்டும் 850-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் இந்தியா முழுவதும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் மூலம் 5 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெற்று வருகிறார்கள்.

பட்டாசு உற்பத்தியில் பேரியம் நைட்ரேட் என்ற வேதிப்பொருள் பயன்படுத்தக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை 4 மாதங்கள் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. இதனால் பல ஆயிரம் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் வேறு ஊர்களுக்கு வேலை தேடி சென்று விட்டனர். பலர் உள்ளூரிலேயே கட்டிட தொழிலாளியாகவும், சுமை தூக்கும் தொழிலாளியாகவும் மாறி விட்டனர். சுமார் 4 மாத போராட்டத்துக்கு பின்னர் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் வழிக்காட்டுதலின்பேரில் பட்டாசு ஆலைகள் திறக்கப்பட்டது.

வழக்கமாக பட்டாசு உற்பத்தியில் 11 மாதங்கள் ஈடுபடும் ஆலை நிர்வாகங்கள் இந்த ஆண்டு போராட்டம் காரணமாக 4 மாதங்கள் உற்பத்தியில் ஈடுபடவில்லை. இதனால் உற்பத்தியில் 40 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் மாற்றுப்பணி தேடி வெளியூர் சென்று விட்டதால் தொழிலாளர்கள் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இந்த தொழில் நிரந்தரம் இல்லை என்று பலர் வேலை தேடி சென்ற ஊர்களிலேயே இருந்து விட்டனர்.

இதனால் தற்போது சிவகாசியில் உள்ள பட்டாசு தொழிலாளர்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. பல பட்டாசு ஆலைகள் வழக்கமாக கொடுக்கும் சம்பளத்தை விட கூடுதல் சம்பளமும், இதர சலுகைகளும் பட்டாசு தொழிலாளர்களுக்கு செய்து கொடுத்துள்ளதாக தெரிகிறது.

வழக்கமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பட்டாசுகளின் விலை 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை விலை உயர்த்தப்படும். ஆனால் இந்த ஆண்டு போதிய உற்பத்தி இல்லாத நிலையில் பட்டாசு விலை கடந்த ஆண்டை காட்டிலும் 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை விலை உயர வாய்ப்பு உள்ளதாக உற்பத்தியாளர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத பட்டாசுகள் விருதுநகர் மாவட்டத்தில் தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு நேரக்கட்டுபாடு இல்லாமல் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி கொடுத்தால் பொதுமக்களும், பட்டாசு உற்பத்தியாளர்களும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைவார்கள்.

பட்டாசு விற்பனையாளர் சங்க தலைவர் இளங்கோவன் கூறியதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளிலும் தற்போது பட்டாசுகள் தீவிரமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த ஆண்டை போல் அதிக அளவில் விற்பனை செய்ய முடியாது. ஏன் என்றால் இந்த ஆண்டு 4 மாத உற்பத்தி போராட்டம் காரணமாக பாதித்தது. இதனால் விலை உயர வாய்ப்புள்ளது. இந்த தொழிலுக்கு இருந்த பாதிப்புகள் நீங்கள் அடுத்த ஆண்டு இன்னும் 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் அளவுக்கு இந்த தொழில் வளர்ச்சி அடையும். பட்டாசு தொடர்பான வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வர உள்ளது. அப்போது இந்த தொழிலுக்கு இருந்த பாதிப்புகள் நீங்கும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர் விநாயகமூர்த்தி கூறும்போது, சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் இந்தியா முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும் நிலையில் வழக்கத்தை விட இந்த ஆண்டு வெளிமாநில வியாபாரிகள் முன்னதாக சிவகாசிக்கு வந்து தங்களுக்கு தேவையான ஆர்டர்களை கொடுத்து வருகிறார்கள். ஆகஸ்டு மாதம் ஆர்டர் கொடுக்கும் பல பெரிய வியாபாரிகள் கடந்த சில நாட்களாக சிவகாசியில் தங்கி தங்களுக்கு தேவையான பட்டாசுகள் குறித்து ஆர்டர் கொடுத்து வருகிறார்கள். இதனால் பட்டாசின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் அந்த தேவையை பூர்த்தி செய்ய போதியகால அவகாசமும், தொழிலாளர்களும் இல்லை. இதனால் மொத்த வியாபாரிகள் கேட்கும் பட்டாசுகளில் 80 சதவீதம் மட்டுமே கொடுக்க முடியும் என்று நம்புகிறோம். பட்டாசு தொழிலில் ஏற்கனவே ஈடுபட்டு வந்த பல நூறு பேர் வேறுபணிக்கு திரும்பி விட்டதால் தொழிலாளர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றார்.

Next Story