யூனியன் கண்மாய்களை குடிமராமத்து செய்ய நடவடிக்கை தேவை; மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை


யூனியன் கண்மாய்களை குடிமராமத்து செய்ய நடவடிக்கை தேவை; மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 10 July 2019 10:15 PM GMT (Updated: 10 July 2019 7:49 PM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள யூனியன் கண்மாய்களை குடிமராமத்து முறையில் மராமத்து செய்ய மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

விருதுநகர்,

மானாவாரி விவசாயம் செய்த விருதுநகர் மாவட்டத்தில் மழை பெய்யும் காலங்களில் கண்மாய்களில் நீரை தேக்கி வைத்தால் தான் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி ஏற்படும். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 1,027 கண்மாய்களில் பொதுப் பணித்துறை கண்மாய்கள் 327-ம், பஞ்சாயத்து கட்டுப்பாட்டில் 700 கண்மாய்களும் உள்ளன.

கடந்த காலங்களில் ஐரோப்பிய நிதி உதவியுடன் மாவட்டத்தில் உள்ள அனைத்து கண்மாய்களும் சுழற்சி முறையில் பாரபட்சம் இன்றி மராமத்து செய்யப்பட்டு வந்தது. காலப்போக்கில் ஐரோப்பிய நிதி உதவி நிறுத்தப்பட்டு விட்டதால் அரசு பொதுப்பணித்துறை கண்மாய்களை மட்டும் மராமத்து செய்து வந்தது. மற்ற பஞ்சாயத்து, யூனியன் கண்மாய்களில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.

தற்போது நிலவும் வறட்சி காரணமாக தமிழக அரசு குடிமராமத்து முறையில் கண்மாய்களை மராமத்து செய்ய உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலும் 65 கண்மாய்கள் ரூ.25 கோடி மதிப்பீட்டில் குடிமராமத்து செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மராமத்து பணிகளை மேற்கொள்ள பாசனதாரர்கள் பொதுப்பணித்துறையை அணுகி வருகின்றனர். ஒரு சில இடங்களில் சேவை நிறுவனங்களும், தொண்டு அமைப்புகளும், பொதுமக்களும் குடிமராமத்து முறையில் பணிகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சிவகாசியில் பெரியகுளம் கண்மாயும், விருதுநகர் அருகே வில்லிபத்திரி கண்மாயும் சேவை அமைப்புகள் மூலம் மராமத்து செய்யப்பட்டுள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் அரசு நிதி ஒதுக்கீட்டில் பொதுப்பணித்துறை, பஞ்சாயத்து மற்றும் யூனியன் கண்மாய்களை உடனடியாக ஊர் பொதுமக்கள், சேவை அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உடன் இணைந்து குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story