கோரிக்கைகளை வலியுறுத்தி, சட்டசபை முன்பு 23-ந் தேதி கட்டிட தொழிலாளர்கள் தர்ணா போராட்டம் - நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவு


கோரிக்கைகளை வலியுறுத்தி, சட்டசபை முன்பு 23-ந் தேதி கட்டிட தொழிலாளர்கள் தர்ணா போராட்டம் - நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 10 July 2019 11:15 PM GMT (Updated: 10 July 2019 8:29 PM GMT)

கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டசபை முன்பு வருகிற 23-ந் தேதி கட்டிட தொழிலாளர்கள் தர்ணா போராட்டம் செய்ய நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

புதுச்சேரி,

புதுச்சேரி கட்டிடக்கலை தொழிலாளர் ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டம் முதலியார்பேட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் விசுவநாதன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. செயல் தலைவர் அபிஷேகம் கலந்துகொண்டு கவுன்சில் முடிவுகளை விளக்கி கூறினார். சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஞானவேல், துணைத்தலைவர்கள் ராஜகுமாரி, முத்துவேல், கந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

புதுவை மாநிலத்தில் மணல் கிடைக்காததால் கட்டுமான பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. அதனை நம்பியுள்ள கட்டிட தொழிலாளர்களும் வேலையின்றி தவிக்கின்றனர். எனவே தமிழகத்தில் இருந்து மணல் கொண்டு வருவதற்கு புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வறுமையில் வாடும் கட்டிட தொழிலாளர்களுக்கு வேலையில்லா கால நிவாரணம் வழங்க வேண்டும்.

கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் போர்டு உறுப்பினர்கள் இல்லாததால் வாரியம் முடங்கி போய் உள்ளது. எனவே போர்டுக்கு உறுப்பினர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். கட்டிட மற்றும் கட்டுமான தொழிலாளர் நலவாரியம் மூலம் அளிக்கப்படும் கல்வி உதவித்தொகையை மாணவ-மாணவிகளுக்கு விரைவில் வழங்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 23-ந் தேதி சட்டசபை முன்பு தர்ணா போராட்டம் நடத்துவது என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Next Story