கடலூர், உழவர் சந்தை பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் - அதிகாரிகள் நடவடிக்கை


கடலூர், உழவர் சந்தை பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் - அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 10 July 2019 10:45 PM GMT (Updated: 10 July 2019 11:11 PM GMT)

கடலூர் உழவர் சந்தை பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளை அதிகாரிகள் அகற்றினர்.

கடலூர்,

கடலூர் நகரில் ஆக்கிரமிப்புகளுக்கு பஞ்சமேயில்லை. சாலையோரங்களில் நாளுக்குநாள் புற்றீசல் போல பெட்டிக்கடைகள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. குறிப்பாக கடலூர் பழைய கலெக்டர் அலுவலக சாலையிலும், சப்-கலெக்டர் அலுவலக சாலையிலும் நாளுக்கு நாள் ஒரு பெட்டிக்கடை முளைத்துக்கொண்டே வருகிறது என்று சொல்லலாம்,

அந்த அளவுக்கு பெட்டிக்கடைகள் வந்துள்ளன. இதனால் பாதசாரிகளுக்கு நடந்து செல்ல நடைபாதையே இல்லை எனலாம். தினமும் காலை, மாலையில் கல்லூரி மாணவ-மாணவிகள் இந்த சாலையில் நடந்து செல்லவே சிரமப்படுகிறார்கள்,

கடலூர் உழவர்சந்தைக்கு தினமும் ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் காய்கறி, பழங்கள் வாங்க வந்து செல்வதால், உழவர்சந்தைக்கு வருபவர்களை குறிவைத்து, உழவர்சந்தைக்கு முன்பே நடைபாதை வியாபாரிகள் கடைவிரித்து விடுகிறார்கள். கோ-ஆப்டெக்ஸ் ஷோரூமுக்கு எதிரே சாலையோரங்களை பழக்கடைக்காரர்கள் ஆக்கிரமித்து உள்ளனர்.

இந்த நிலையி்ல் பெயரளவுக்கு உழவர்சந்தை பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளையும் , உழவர் சந்தையையொட்டிய தியேட்டருக்கு செல்லும் வழியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வாழைத்தார் கடையையும், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்துடன் இணைந்த மினிலாரி தொழிற்சங்க அலுவலகத்தையும் நகராட்சி ஊழியர்கள் நேற்று அகற்றினர்.

Next Story