மேட்டூர் அருகே ஓடும் பஸ்சில் கழுத்தை அறுத்துக்கொண்ட முன்னாள் ராணுவ வீரர் மனைவி
மேட்டூர் அருகே ஓடும் பஸ்சில் முன்னாள் ராணுவ வீரரின் மனைவி கழுத்தை அறுத்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேட்டூர், சேலம் மாவட்டம், மேட்டூர் தினசரி மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் சந்தானம், முன்னாள் ராணுவ வீரர். இவருடைய மனைவி அகல்யா (வயது 48). நேற்று முன்தினம் இவர் சேலத்திற்கு சென்று விட்டு தனியார் பஸ்சில் மேட்டூருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். மேட்டூர் ராமன் நகர் அருகே அந்த பஸ் வந்தது. அப்போது ஓடும் பஸ்சில் அகல்யா, பையில் வைத்திருந்த கத்தியை எடுத்து தனது கழுத்தை அறுத்து கொண்டார். இதில் அவரது கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர் ஆம்புலன்ஸ் மூலம் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கருமலைக்கூடல் போலீசார் அகல்யாவிடம் விசாரணை நடத்தினர். குடும்ப பிரச்சினை காரணமாக தனது கழுத்தை தானே அறுத்து கொண்டதாகவும், இது சம்பந்தமாக புகார் கொடுக்க விருப்பம் இல்லை என்றும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஓடும் பஸ்சில் நடந்த இந்த சம்பவம் மேட்டூர் பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. |