நாட்டு வெடிகுண்டு தயாரித்த வழக்கு: தலைமறைவான 4 பேரை பிடிக்க போலீஸ் தீவிரம்
நாட்டு வெடிகுண்டு தயாரித்த வழக்கில் தலைமறைவாக உள்ள 4 பேரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
காலாப்பட்டு,
புதுவை மாநிலம் சேதராப்பட்டு அருகே துத்திப்பட்டு கிரிக்கெட் மைதானம் பகுதியில் கடந்த 8-ந் தேதி இரவு பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதுபற்றி தகவல் அறிந்த வில்லியனூர் மற்றும் சேதராப்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
வில்லியனூர் அருகே உத்திரவாகினிபேட் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான ‘பாம்’ ரவி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து துத்திப்பட்டு கிரிக்கெட் மைதானத்தில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்து உள்ளனர். அப்போது ஒரு வெடிகுண்டு எதிர்பாராத விதமாக வெடித்ததில், பாம் ரவியின் வலது கை சிதைந்து போனது. அவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வருகிறார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகரை கொலை செய்ய நண்பருக்காக நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பாம் ரவியை போலீசார் கைது செய்தனர். அவர் போலீஸ் பாதுகாப்புடன் தொடர்ந்து சிகிச்சைப்பெற்று வருகிறார். அவர் கொடுத்த தகவலின் பேரில் உத்திரவாகினிபேட் சரண் மற்றும் சிறுவன் ஒருவனை போலீசார் கைது செய்தனர். அவர்களை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் போலீசார் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story