மாவட்ட செய்திகள்

ஓசூர்கெலவரப்பள்ளி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு + "||" + osur Open water for irrigation from Kelavarapalli Dam

ஓசூர்கெலவரப்பள்ளி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

ஓசூர்கெலவரப்பள்ளி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்காக 150 நாட்களுக்கு நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் கலந்து கொண்டு, அணையின் வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய் மற்றும் பிரிவு கால்வாய்களில் முதல் போக பாசனத்திற்காக தண்ணீரை திறந்து விட்டார்.

பின்னர் கலெக்டர் கூறியதாவது:- கெலவரப்பள்ளி அணையின் இடதுபுற பிரதான கால்வாய் மற்றும் பிரிவு கால்வாய்கள் மூலம் 5,918 ஏக்கரும், வலதுபுற பிரதான கால்வாய் மூலம் 2,082 ஏக்கரும் என மொத்தம் 8,000 ஏக்கர் புன்செய் நிலங்கள் பயன் அடையும்.

இதன் மூலம் ஓசூர் மற்றும் சூளகிரி தாலுகாவில் உள்ள தட்டகானபள்ளி, பூதிநத்தம், பெத்த முத்தாளி, முத்தாளி, அட்டூர், கதிரேபள்ளி, மாரசந்திரம், கொத்தூர், மோரனபள்ளி, தொரப்பள்ளி, காமன்தொட்டி, தின்னூர் உள்ளிட்ட 22 கிராமங்கள் பயன் பெறும். அணையின் நீர் இருப்பு மற்றும் அணைக்கு வரும் நீர் வரத்து ஆகியவற்றை கருத்தில் கொண்டு 150 நாட்களுக்கு சுழற்சி முறையில் முதல் 10 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்தும் அடுத்த 5 நாட்கள் நிறுத்தியும், 10 நனைப்புகளுக்கு நீர் வழங்கப்படும்.

தண்ணீர் திறந்து விடப்படும் காலங்களில் இரு கால்வாய்களிலும் சேர்த்து வினாடிக்கு மொத்தம் 88 கன அடி நீர் திறந்து விடப்படும். எனவே, விவசாயிகள் நீர் பங்கீட்டில் பொதுப்பணித்துறையினருடன் ஒத்துழைத்து நீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக விளைச்சல் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, முன்னாள் எம்.பி. அசோக்குமார், உதவி செயற்பொறியாளர் சரவணகுமார் மற்றும் உதவி பொறியாளர்கள், கெலவரப்பள்ளி அணை ஆயக்கட்டு தலைவர்கள் பிரகாஷ், நாராயணசாமி, ராஜப்பா, முனிராஜ் மற்றும் காமன்தொட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் சந்திரசேகர், ஓசூர் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் அசோகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கிருஷ்ணகிரி அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
கிருஷ்ணகிரி அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.