சத்தியமங்கலம் பகுதியில் மல்லிகை செடிகளுக்கு குட்டி விமானம் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் விவசாயிகள்


சத்தியமங்கலம் பகுதியில் மல்லிகை செடிகளுக்கு குட்டி விமானம் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் விவசாயிகள்
x
தினத்தந்தி 13 July 2019 4:30 AM IST (Updated: 13 July 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் பகுதியில் மல்லிகை செடிகளுக்கு விவசாயிகள் குட்டி விமானம் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கிறார்கள்.

பவானிசாகர்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பவானிசாகர், கொத்தமங்கலம், சிக்கரசம்பாளையம், தாண்டாம்பாளையம், பகுத்தம்பாளையம், இக்கரைதத்தப்பள்ளி உள்ளிட்ட 100–க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லிகைப்பூ செடி பயிரிடப்பட்டுள்ளது.

மல்லிகை செடிகளுக்கு நோய் தாக்குதல் அதிகம் என்பதால் அடிக்கடி பூச்சி மருந்து தெளிக்க வேண்டும். பூச்சி மருந்து தெளிப்பதற்கு அதிக செலவு ஏற்படுவதோடு கால விரயமும் ஏற்படுவதால் மல்லிகை பயிரிட்டுள்ள விவசாயிகள் பெரும் அவதிப்பட்டு வந்தனர்.

இந்தநிலையில் சேலத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தினர் பறக்கும் ட்ரோன் (குட்டி விமானம்) எந்திரத்தை பயன்படுத்தி பயிர்களுக்கு மருந்து தெளித்தனர். இதை அறிந்து சத்தி பகுதி விவசாயிகள் அவர்களை தொடர்பு கொண்டு சத்தியமங்கலம் அருகே உள்ள கொக்கரகுண்டி பகுதிக்கு வரவழைத்தனர்.

அதைத்தொடர்ந்து அப்பகுதிகளில் உள்ள மல்லிகைச்செடிகளுக்கு குட்டி விமானம் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது. பவர் ஸ்பிரேயர் மூலம் ஒரு நாளைக்கு 2 முதல் 3 ஏக்கர் வரை மட்டுமே மருந்து தெளிக்க முடியும் என்ற நிலையில் குட்டி விமானம் மூலம் ஒரு நாளைக்கு 40 ஏக்கர் வரை பூச்சி மருந்து தெளிப்பதோடு, பூச்சிக்கொல்லி மருந்து தேவையும் பாதியாக குறைவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

எனவே இக்கருவியை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story