மாவட்ட செய்திகள்

பாம்பனில் புதிய ரெயில் பால பணிகள் விரைவில் தொடங்கும் - கோட்ட மேலாளர் தகவல் + "||" + New rail bridge works will begin soon in pomban

பாம்பனில் புதிய ரெயில் பால பணிகள் விரைவில் தொடங்கும் - கோட்ட மேலாளர் தகவல்

பாம்பனில் புதிய ரெயில் பால பணிகள் விரைவில் தொடங்கும் - கோட்ட மேலாளர் தகவல்
பாம்பனில் புதிய ரெயில் பால பணிகள் விரைவில் தொடங்கி 2 ஆண்டுகளுக்குள் பணிகள் முடியும் என ராமேசுவரத்தில் ரெயில்வே கோட்ட மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
ராமேசுவரம்,

ராமேசுவரம் ரெயில்வே நிலையத்தை ஆய்வு செய்ய நேற்று மதுரையில் இருந்து காலை 6.30 மணிக்கு ராமேசுவரத்திற்கு புறப்பட்ட பயணிகள் ரெயிலில் சிறப்பு பெட்டிகள் இணைத்து அதன் மூலம் மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் லெனின் ராமேசுவரம் வந்தார். கடலில் அமைந்துள்ள ரெயில்வே பாலம், பாலத்தின் மைய பகுதியில் உள்ள தூக்குப்பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


அதனை தொடர்ந்து ராமேசுவரம் ரெயில் நிலையம் வந்த மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் வி.ஆர்.லெனின் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் சென்று வருவதற்காக அமைக்கப்பட்டுள்ள சிக்னல்கள் செயல்பாட்டு அறை, டெக் னிக்கல் அறைகளுக்கும் சென்று அங்குள்ள கருவிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அந்த அறைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டால் அறையில் உள்ள தீ எச்சரிக்கை கருவி செயல்படுகிறதா அதன் மூலம் உடனடியாக சத்தம் வருகிறதா என்பது பற்றி செயல்முறை விளக்கம் நடைபெற்றது. அறையில் இருந்த தீயை அணைக்கக் கூடிய தீ அணைப்பான் கருவிகளின் செயல்பாடு பற்றியும் பணியில் இருந்த ரெயில் அதிகாரிகளிடம் தீ அணைப்பான் கருவிகளை பயன்படுத்துவது எவ்வாறு என்பது குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து ரெயில் நிலையத்தில் நடந்துவரும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது கோட்டமேலாளர் வி.ஆர். லெனின் கூறியதாவது:-

ராமேசுவரம் ரெயில் நிலையத்தை ஆய்வு செய்ய வந்துள்ளேன்.ரெயில் நிலையத்தில் உள்ள டெக்னிக்கல் மற்றும் சிக்னல்கள் செயல்படும் சாதனங்கள் உள்ள அறையில் தீ விபத்து ஏற்பட்டால் அதை அணைப்பதற்கு தேவையான தீ அணைப்பான் கருவிகள் செயல்பாட்டில் உள்ளதா,தீ எச்சரிக்கை கருவி செயல்படுகிறதா என்பது குறித்து செயல்முறை விளக்கம் செய்து பார்க்கப்பட்டது. தீ அணைப்பான் கருவியும் செயல்பாட்டில் உள்ளது. பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலம் ரெயில்வே துறையோடு சேர்ந்த ஆர்.வி.என்.எல். மூலமாக தான் கட்டப் படுகிறது.விரைவில் புதிய ரெயில் பாலத்தின் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

2 ஆண்டுகளுக்குள் புதிய ரெயில் பாலத்தின் பணிகள் முழுமையாக முடிந்துவிடும்.புதிய ரெயில் பாலம் முடிந்தபின் தற்போது உள்ள ரெயில் பாலத்தின் மைய பகுதியில் உள்ள தூக்குப்பாலம் நிரந்தரமாக அகற்றப்படுவதுடன் பழமையான பாலமாக உள்ளதால் ரெயில் பாலத்தின் ஒரு பகுதி மட்டும் வரலாற்று சின்னங்களாக அங்கேயே இருக்கும். தற்போதுள்ள ரெயில் பாலம் பாதுகாப்பாகவே உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.ஆய்வின்போது கோட்ட பொறியாளர் முகைதீன்பிச்சை, பாதுகாப்பு அதிகாரி மனோகரன், சிக்னல் அதிகாரி சுமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.