ஆஸ்திரேலியாவில் விற்கப்பட்ட ரூ.30 கோடி மதிப்புள்ள சிலையை தமிழகத்துக்கு கொண்டு வர முட்டுக்கட்டை


ஆஸ்திரேலியாவில் விற்கப்பட்ட ரூ.30 கோடி மதிப்புள்ள சிலையை தமிழகத்துக்கு கொண்டு வர முட்டுக்கட்டை
x
தினத்தந்தி 12 July 2019 10:45 PM GMT (Updated: 12 July 2019 9:11 PM GMT)

ஆஸ்திரேலியாவில் விற்கப்பட்ட ரூ.30 கோடி மதிப்புள்ள சிலையை தமிழகத்துக்கு கொண்டு வர முட்டுகட்டை ஏற்படுத்தியதாக முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. மீது சிலை கடத்தல் தடுப்புபிரிவு அதிகாரி பொன் மாணிக்கவேல் குற்றம் சாட்டினார். பழனியில், சிலை கடத்தல் தடுப்புபிரிவு அதிகாரி பொன் மாணிக்கவேல் நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பழனி,

தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்டது 2 ஆயிரம் சிலைகள் மட்டுமல்ல. 20 ஆயிரம் சிலைகள் கூட வெளிநாடுகளில் இருக்கலாம். இதில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவால் போடப்பட்ட வழக்குகளில் தொடர்புடையது 20 சிலைகள் ஆகும். இவற்றில் நாகப்பட்டினத்தில் 107 சென்டிமீட்டர் உயரமுள்ள செம்பியன்மாதேவி சிலை, சேலம் அருகே உள்ள வீரசோழபுரத்தில் உள்ள சிவன் சிலை கண்டறியப்பட்டுள்ளது. அதேபோன்று நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார்-அறம் வளர்த்தநாயகி கோவிலில் இருந்து 36 ஆண்டுகளுக்கு முன்பு நடராஜர், அறம்வளர்த்த நாயகி, மாணிக்கவாசகர், காரைக்கால்அம்மையார் ஆகிய 4 சிலைகள் திருடப்பட்டன. இதில் கலைநயமிக்க நடராஜர் சிலை கடந்த 2001-ல் ரூ.30 கோடிக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டு நகரில் இருக்கும் அருங்காட்சியகத்துக்கு விற்கப்பட்டது. இதனை திருப்பி தருவதாக அருங்காட்சியக நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் 12 வாரத்துக்குள் அதனை கொண்டு வருவதாக 1 ஆண்டுக்கு முன்பு தெரிவித்திருந்தேன். அதனை என்னால் காப்பாற்ற முடியவில்லை.

இதற்கு காரணம் முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன் தான். அவருக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து சிலையை மீட்டு வருவது தொடர்பாக கடிதம் எழுதினேன். அதில் அடிலெய்டில் இருப்பது நமது சிலை தான், அவர்கள் கொடுக்க தயாராக இருப்பதாகவும், திருப்பி கொண்டுவர நிதி உதவி தருமாறும் தெரிவித்திருந்தேன். ஆனால், 9 மாதங்களுக்கு பிறகு உங்களுக்கு எப்படி தெரியும்?, உங்களிடம் யார் தெரிவித்தது? என்று பதில் அவர் கடிதம் எழுதினார். இதுதொடர்பாக கேள்வி கேட்கும் அதிகாரம் இல்லையென்றும், நீதிமன்ற மேற்பார்வையில் தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டிருப்பதாகவும், ரூ.30 கோடி மதிப்பிலான நடராஜர் சிலையை தமிழகத்திற்கு கொண்டுவர உங்களுக்கு விருப்பமில்லை என்று தெரிவித்தேன்.

எனக்கு உதவியாளரோ, டைப்பிஸ்ட்டோ கிடையாது. எனவே அதிகாரிகளை வைத்தே இந்த வேலைகளை செய்து வருகிறேன். நேற்று கூட பழனியில் கணினிக்கு தேவையான சிறிய உபகரணம் வாங்க எனது பென்சன் தொகையை செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. போக்குவரத்து, உணவுப்படி போன்ற அனைத்தும் எனது பென்சன் தொகையில் இருந்துதான் செலவழித்து வருகிறேன். இரவு, பகலாக தூங்காமல் வேலை பார்த்து வருகிறேன். தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்டு வெளிநாடுகளில் உள்ள 20 சிலைகளையும் கண்டறிந்து விட்டோம். ஆனால், கடந்த நவம்பர் மாதம் 30-ந்தேதி நான் ஓய்வு பெறுகிறேன் என்பதால் காலம் தாழ்த்திவிட்டனர். ஆனால், உயர்நீதிமன்ற நடவடிக்கையால் மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளேன். எனவே எப்படியாவது சிலைகளை எனது தலைமையிலான குழு மீட்டு விடுவோம்.

தமிழக அரசு எப்படியாவது இதற்கென நிதி ஒதுக்க வேண்டும். நேற்று கூட இதுதொடர்பாக உள்துறை செயலருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன். ஏற்கனவே முன்னாள் டி.ஜி.பி. 300 நாட்கள் தாமதப்படுத்தி விட்டார். நீங்கள் ஒரு வாரத்திற்குள் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்று வலியுறுத்தி உள்ளேன்.

என்னால் சுதந்திரமாக வேலை பார்க்க முடியவில்லை. கடுமையான சூழலில் தான் வேலை பார்த்து வருகிறேன். தனி மனிதனாக போராடிக் கொண்டிருக்கிறேன். ஒரு உதவியாளர், கண்காணிப்பாளர் வேண்டும் என்று நீண்ட நாட்களாக கேட்டு வருகிறேன். ஆனால் அது தரப்படாமல், பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. என்னால் விசாரணை நடத்த முடியவில்லை. சாட்சிகள் கடுமையாக மிரட்டப்படுகிறார்கள்.

குற்றவாளிகளை பிடிப்பதற்கு சொந்த பணத்தை செலவு செய்ய வேண்டி உள்ளது. இது அரசாங்கத்தின் வேலை. முன்பணம் கொடுத்திருக்க வேண்டும். சிலை கடத்தல் தொடர்பாக சாட்சி சொல்பவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுகிறது. மேலும் முக்கிய சாட்சியாக உள்ள இணை ஆணையர் ஒருவர் ஓய்வுபெறும் நிலையில் இடைநீக்கம் செய்யப்படுகிறார். சாட்சி சொல்லும் ஊழியர்கள் வேறு காரணங்கள் கூறி பணியிடை நீக்கம் செய்யப்படுகின்றனர். கோவில்களில் சாட்சிகளின் காலில் விழுந்து கெஞ்சினாலும் பயந்து ஓடுகின்றனர். இதனை எங்களால் உணர முடிகிறது. சாட்சி சொல்பவர்களின் பாதுகாப்பு விரைவில் உறுதி செய்யப்படும். உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பாக முறையிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story