நெல்லையில் துணிகரம்: ஒரே நாளில் 2 வீடுகளில் 37 பவுன் நகை கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


நெல்லையில் துணிகரம்: ஒரே நாளில் 2 வீடுகளில் 37 பவுன் நகை கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 14 July 2019 3:00 AM IST (Updated: 14 July 2019 12:34 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் ஒரே நாளில் முன்னாள் ராணுவ வீரர் வீடு உள்பட 2 இடங்களில் 37 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நெல்லை, 

நெல்லையில் ஒரே நாளில் முன்னாள் ராணுவ வீரர் வீடு உள்பட 2 இடங்களில் 37 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ராணுவ வீரர்

நெல்லை பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தை சேர்ந்தவர் ஞானமுத்து கனகராஜ் (வயது 42), முன்னாள் ராணுவ வீரரான இவர் பாளையங்கோட்டை பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை அவருடைய மனைவி குழந்தைகளை டியூசனில் விட்டு விட்டு கணவரின் கடைக்கு சென்று விட்டார். அவர்கள் இரவு 10 மணி அளவில் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 20 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து ஞானமுத்து கனகராஜ், பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன், தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

கைரேகை நிபுணர்கள் வந்து வீட்டில் பதிவான தடயங்களை பதிவு செய்தனர். இந்த துணிகர கொள்ளை தொடர்பாக பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

அரிசி கடைக்காரர்

நெல்லையை அடுத்த பழையபேட்டை ஊழியஸ்தானம் ஆசிரியர் பயிற்சி பள்ளி அருகே வசிப்பவர் கண்ணன் (வயது 40). இவர் அந்த பகுதியில் அரிசி கடை நடத்தி வருகிறார். அவருடைய குடும்பத்தினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியூர் சென்று விட்டனர். இதனால் கண்ணன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

நேற்று முன்தினம் இரவு கண்ணன் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு இருந்த பீரோ உடைக்கப்பட்டு 17 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. யாரோ மர்ம நபர்கள் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு வீட்டிற்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து கண்ணன் நெல்லை டவுன் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் அங்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த இடத்தை மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடி நின்றது. ஆனால், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த கொள்ளை குறித்து நெல்லை டவுன் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். நெல்லை மாநகர பகுதியில் ஒரே நாளில் 2 வீடுகளில் 37 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story