கர்நாடக எம்.எல்.ஏ.க்களிடம் குதிரைபேரம்: பா.ஜனதாவை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கர்நாடக எம்.எல்.ஏ.க்களிடம் குதிரைபேரம்: பா.ஜனதாவை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 July 2019 11:00 PM GMT (Updated: 13 July 2019 7:41 PM GMT)

கர்நாடக மாநில எம்.எல்.ஏ.க்களிடம் பா.ஜனதா குதிரைபேரம் நடத்தி வருவதாக கூறியும், அதனை கண்டித்தும் திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மலைக்கோட்டை,

கர்நாடக மாநிலத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதன் காரணமாக, கர்நாடக அரசில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்த பெரும் குழப்பத்திற்கு கர்நாடக பா.ஜனதாவினர் தான் காரணம் என்றும், அவர்கள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தங்கள் வசம் இழுக்க குதிரைபேரம் பேசி வருவதாகவும் குற்றம் சாட்டி வருகிறார்கள். பா.ஜனதா கட்சியின் சர்வாதிகார போக்கை கண்டிக்கும் வகையில் நேற்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதன்படி, திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், திருச்சி காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சந்திரன், முன்னாள் மாவட்ட தலைவர் சி.ஆர்.பாபு, துணைத்தலைவர்கள் செந்தில்நாதன், முரளி, மகளிர் அணி மாநில பொதுச்செயலாளர் ஜெகதீஸ்வரி உள்ளிட்ட ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், மத்திய மோடி அரசே கர்நாடகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சிக்கும் குதிரை பேரத்தை கைவிடு என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கர்நாடக அரசை கலைக்க முயற்சிக்காதே என்றும், ஒரே மதம், ஒரே கல்வி, ஒரே கலாச்சாரம் என்ற சர்வாதிகார எண்ணத்தை திணிக்காதே என்றும், ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தாதே என்றும் கோஷம் எழுப்பப்பட்டது.

இதேபோல் திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நெ.1 டோல்கேட் ரவுண்டானா அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் திருச்சி கலை தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கண்டனம் தெரிவித்து பேசினர். முடிவில் மாவட்ட துணைத்தலைவர் இளையராஜா நன்றி கூறினார். இதில் கோட்டம், வட்டம், வார்டு தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மணப்பாறையில் ரவுண்டானா பகுதியில் காங்கிரஸ் நகர தலைவர் நாகேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்டத் தலைவர் கோவிந்தராஜ் கண்டனம் தெரிவித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ராஜலிங்கம், மாவட்ட துணைத் தலைவர் பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில விவசாய அணித் தலைவர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

Next Story