ஓமலூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியல்


ஓமலூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 13 July 2019 9:45 PM GMT (Updated: 13 July 2019 8:38 PM GMT)

ஓமலூர் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

ஓமலூர், 

ஓமலூர் அடுத்த தும்பிபாடி ஊராட்சி சரக்கபிள்ளையூர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த ஒருவார காலமாக குடிநீர் வினியோகம் சரிவர செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து ஊராட்சி செயலாளர் மற்றும் குடிநீர் தொட்டி ஆபரேட்டரிடம் கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால் தண்ணீர் வினியோகம் குறித்து ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தி அடைந்த அந்த கிராம மக்கள் நேற்று காலையில் காலிக்குடங்களுடன் சரக்கபிள்ளையூரில் உள்ள தும்பிபாடி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு பிரதான சாலைக்கு திரண்டு வந்தனர். அங்கு அவர்கள் குடிநீர் கேட்டு சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும், தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். விரைவில் குடிநீர் சீராக வினியோகம் செய்திட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி கூறியதை அடுத்து கிராம மக்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த போராட்டம் காரணமாக அந்த சாலையில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story