நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் குடிமராமத்து பணிகளை தொய்வின்றி முழுமையாக செய்ய வேண்டும் - கலெக்டர் சிவஞானம் பேச்சு


நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் குடிமராமத்து பணிகளை தொய்வின்றி முழுமையாக செய்ய வேண்டும் - கலெக்டர் சிவஞானம் பேச்சு
x
தினத்தந்தி 13 July 2019 10:00 PM GMT (Updated: 13 July 2019 8:45 PM GMT)

நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் குடிமராமத்து பணிகளை தொய்வின்றி முழுமையாக செய்ய வேண்டும் என கலெக்டர் சிவஞானம் கூறினார்.

விருதுநகர்,

சாத்தூர் அருகே மு.நாகலாபுரம் கிராமத்திலுள்ள முடித்தலை கண்மாய், அய்யம்பட்டி கண்மாய் மற்றும் ராஜபாளையம் சேத்தூர் கிராமத்தில் உள்ள ஓடைக்குளம் கண்மாய் ஆகிய கண்மாய்களில் நடைபெறும் குடிமராமத்துப் பணிகளை கலெக்டர் சிவஞானம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இப்பணிகளை தொடங்கி வைத்து கலெக்டர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் நீர்வள ஆதாரங்களை பேணி பாதுகாக்கவும், நிலத்தடி நீர்வளத்தை பெருக்கவும், மழைநீரை விரையமின்றி சேமித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கத்தோடு, தமிழகம் முழுவதும் 1,829 கண்மாய்களில் குடிமராமத்து பணிகளை ரூ.499 கோடி மதிப்பில் மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், விருதுநகர் மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்துறையின் மூலம் ரூ.26.70 கோடி மதிப்பீட்டில் 65 கண்மாய்கள் தேர்வு செய்யப்பட்டு விவசாயிகளின் பங்களிப்போடு புனரமைக்கும் பணிகள் தொடங்கப்படவுள்ளன.

அதன்படி சாத்தூர் அருகே உள்ள மு.நாகலாபுரம் கிராமத்திலுள்ள முடித்தலை கண்மாய் ரூ.27.60 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் 46.17 எக்டர் விளைநிலங்கள் பயன்பெறும். அய்யம்பட்டி கண்மாய் ரூ.37.50 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் 137.70 எக்டர் விளைநிலங்கள் பயன்பெறும். மேலும், ராஜபாளையம் சேத்தூர் கிராமத்தில் உள்ள ஓடைக்குளம் கண்மாய் ரூ.32 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் 44.52 எக்டர் விளைநிலங்கள் பயன்பெறும்.

கண்மாய்களின் கரைகளை பலப்படுத்துதல், மடைகளை பழுதுபார்த்தல் மற்றும் வரத்துக்கால்வாய்களை தூர்வாருதல், ஆக்கிரமிப்புகளை அகற்ற நில அளவை செய்து கண்மாய்களில் எல்லை கற்களை நடுதல், சீமைக் கருவேலமுட்செடிகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் குடிமராமத்து பணிகளாக மேற்கொள்ளப்படவுள்ளது.

இப்பணிகளை தரமான முறையிலும், நீர்வள ஆதாரங்களை பேணி பாதுகாக்கின்ற வகையிலும், நிலத்தடி நீர்வளத்தை பெருக்கும் வகையிலும், மழைநீரை விரையமின்றி சேமித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கிலும் நடைபெற வேண்டும். இப்பணிகளை காலம் தாழ்த்தாமல் விரைந்து தொடங்கி பருவமழை தொடங்குவதற்கு முன்பாக அரசு நிர்ணயிக்கப்பட்ட காலகட்டத்திற்குள் தொய்வின்றி முழுமையாக நிறைவு செய்ய வேண்டும். மேலும் விருதுநகர் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டப்பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 65 கண்மாய்கள் தவிர இதர கண்மாய்களை தூர்வாரும் பணியில் விருப்பமுள்ள இளைஞர்கள், மாணவ- மாணவிகள், விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மாவட்ட நிர்வாகத்தின் உரிய அனுமதி பெற்று பணிகளில் ஈடுபடலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைதொடர்ந்து தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் வெம்பக்கோட்டை அருகே கீழராஜகுலராமன் கிராமத்திலுள்ள கடம்பன்குளம் கண்மாயில் நடைபெறவுள்ள குடிமராமத்து பணிகளையும் கலெக்டர் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் காளிமுத்து உள்பட பொதுப்பணித்துறை அலுவலர்கள், வட்டாட்சியர்கள், அரசு அலுவலர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story