ரூ.4¾ கோடியில் கட்டப்பட்டுள்ள அரசு கல்வியியல் கல்லூரி கட்டிட உறுதித்தன்மை குறித்து கோட்டாட்சியர் ஆய்வு


ரூ.4¾ கோடியில் கட்டப்பட்டுள்ள அரசு கல்வியியல் கல்லூரி கட்டிட உறுதித்தன்மை குறித்து கோட்டாட்சியர் ஆய்வு
x
தினத்தந்தி 13 July 2019 10:15 PM GMT (Updated: 13 July 2019 9:33 PM GMT)

ரூ.4¾ கோடியில் கட்டப்பட்டுள்ள விழுப்புரம் அரசு கல்வியியல் கல்லூரியின் கட்டிட உறுதித்தன்மை குறித்து கோட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம், 

விழுப்புரத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி தொடங்க கடந்த 2017-ம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி விழுப்புரம் வி.மருதூரில் 2 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டது.

இந்த இடத்தில் ரூ.4 கோடியே 83 லட்சம் மதிப்பில் 14 வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்களுடன் கூடிய அரசு கல்வியியல் கல்லூரிக்கான கட்டுமான பணிகள் தொடங்கி நடந்து வந்தன. இப்பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்தது.

இதனை தொடர்ந்து கல்லூரி வகுப்புகள் தொடங்குவதற்கு மத்திய அரசின் தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி குழுவினர், கல்லூரியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அனுமதி வழங்குவார்கள். இதற்காக அவர்களுக்கு கட்டிட உறுதித்தன்மை உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களையும் அனுப்ப வேண்டும்.

இதையொட்டி நேற்று காலை விழுப்புரம் கோட்டாட்சியர் குமாரவேல், அரசு கல்வியியல் கல்லூரியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்த அவர், அரசு விதிமுறைப்படிதான் கட்டிடம் கட்டப்பட்டுள்ளதா? என்றும் ஏதேனும் விதிமீறல் நடந்துள்ளதா? என்று கட்டிட வரைபடத்தை பார்வையிட்டார். தொடர்ந்து, கல்லூரி வகுப்பறைகளையும் மற்றும் கல்லூரி சுற்றுப்புற வளாகத்தையும் கோட்டாட்சியர் குமாரவேல் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது தாசில்தார் (பொறுப்பு) செல்வராஜ், மண்டல துணை தாசில்தார் வெங்கட்ராஜ், வருவாய் ஆய்வாளர் சாதிக், நில அளவையர்கள் மகேஸ்வரன், ஹரிபிரகா‌‌ஷ், கிராம நிர்வாக அலுவலர் பு‌‌ஷ்பகாந்தன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story