நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த டாக்டர்கள் கடுமையாக உழைத்தனர் கலெக்டர் ஷில்பா பேச்சு


நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த டாக்டர்கள் கடுமையாக உழைத்தனர் கலெக்டர் ஷில்பா பேச்சு
x
தினத்தந்தி 15 July 2019 4:00 AM IST (Updated: 14 July 2019 11:12 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த டாக்டர்கள் கடுமையாக உழைத்தனர் என்று கலெக்டர் ஷில்பா கூறினார்.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த டாக்டர்கள் கடுமையாக உழைத்தனர் என்று கலெக்டர் ஷில்பா கூறினார்.

கருத்தரங்கம்

தொழில் முனைவோர் கூட்டமைப்புடன் இணைந்த மருத்துவ துறை சார்ந்த “பிக்கி”என்ற அமைப்பு மருத்துவத்துறையின் வளர்ச்சி மற்றும் அதன் சவால்கள் குறித்து தமிழ்நாடு ஹெல்த்கேர் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் கருத்தரங்கம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு ‘தமிழ்நாடு ஹெல்த்கேர் 2019’ என்ற கருத்தரங்கம் பாளையங்கோட்டையில் நேற்று நடந்தது. இந்த கருத்தரங்கத்தை தமிழ்நாடு அரசு, பிக்கி அமைப்பு, தினத்தந்தி, அப்பல்லோ மருத்துவமனை, ஷிபா மருத்துவமனை, அன்னை வேளாங்கண்ணி மருத்துவமனை, ஆலடி அருணா நர்சிங் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்தியது.

நிகழ்ச்சிக்கு அப்பல்லோ மருத்துவமனை டாக்டரும், பிக்கியின் அமைப்பாளருமான டாக்டர் பாலாஜி தலைமை தாங்கி வரவேற்று பேசினார். இந்திய மருத்துவ சங்க நெல்லை கிளையின் துணை தலைவர் பிரான்சிஸ்ராய், நெல்லை மருத்துவக்கல்லூரி டீன் கண்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

கலெக்டர் ஷில்பா கலந்துகொண்டு கருத்தரங்கத்தை தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

டெங்கு காய்ச்சல்

டாக்டர்களின் சேவை சிறப்பானது. டாக்டர்கள் நோயாளிகளின் உயிரை காப்பாற்ற அதிக முயற்சி எடுத்து அவர்களின் நோயை முதலில் அறிந்து அதற்கு தேவையான சிகிச்சை அளிக்கிறார்கள். நெல்லை மாவட்டத்தில் டாக்டர்கள் சிறந்த மருத்துவ சேவை செய்து வருகிறார்கள்.

நெல்லை மாவட்டத்தில் 2018-ம் ஆண்டு டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிக அளவில் இருந்தது. இதை கட்டுப்படுத்த தீவிர முயற்சி எடுத்தோம். இந்த முயற்சிக்கு மருத்துவம், சுகாதார துறையினரும், நெல்லை மருத்துவக்கல்லூரியும் அதிக ஒத்துழைப்பு கொடுத்தனர். உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாக சென்று டெங்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பணியாற்றினார்கள். வீடு வீடாக டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில் அரசு டாக்டர்களும், தனியார் மருத்துவமனை டாக்டர்களும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கடுமையாக உழைத்தனர். அவர்களுடைய உழைப்பால் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டது.

தென் இந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் நெல்லையில் படித்த டாக்டர்கள் தான் சென்னையில் மிகப்பெரிய டாக்டர்களாக இருந்து மருத்துவ சேவை புரிந்து வருகிறார்கள். கர்நாடகத்தில் தமிழகத்தில் இருந்து வந்த டாக்டர்களிடம் தான் அதிக அளவில் சிகிச்சை பெறுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

உயர்தர சிகிச்சை

நெல்லை மருத்துவக்கல்லூரி டீன் கண்ணன் பேசுகையில், “நெல்லை மருத்துவக்கல்லூரி தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய 3-வது மருத்துவக்கல்லூரியாகும். இங்கு 250 மருத்துவ படிப்புக்கான இடம் உள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில் தற்போது திறமையான டாக்டர்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக புதிய பாடத்திட்டத்தை உருவாக்கி உள்ளது. நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி மூலம் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சிறப்பான முறையில் செய்யப்பட்டு வருகிறது. மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகளை தானம் பெற்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சிறப்பான முறையில் செய்யப்பட்டு வருகிறது” என்றார்.

டாக்டர் பாலாஜி பேசுகையில், “கிராமப்புற மக்களுக்கு நகர்ப்புற மக்களுக்கு கிடைக்கக்கூடிய அனைத்து மருத்துவ வசதிகளும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. இந்தியாவில் மருத்துவத்துறைக்கு போதுமான நிதி ஒதுக்கப்பட வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். மருத்துவத்துறையை தற்போது தொழில் துறையில் சேர்த்து உள்ளனர். பல தொழில்களுக்கு வரி விலக்கு அளிப்பது போல் மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் தயாரிக்கும் தொழில்களுக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும்” என்றார்.

மருத்துவத்துறையின் சவால்கள்

கருத்தரங்கில் கிராமப்புறங்களில் மருத்துவ வசதியை மேம்படுத்துவது குறித்து டாக்டர் அருள்ராஜ், கிராமப்புறங்களில் அரசின் சேவைகள் குறித்து சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் கிருஷ்ணன், மருத்துவத்துறையில் உள்ள சவால்கள் குறித்து டாக்டர்கள் அருள்விஜயகுமார், ஆனந்த் ஆகியோரும், வீடுகளுக்கு சென்று செவிலியர்கள் செய்யும் சேவைகள் குறித்து மதுரை அப்பல்லோ நர்சிங் கல்லூரி முதல்வர் ஹெலன் மேரி பிரிட்டோ, தற்போதைய உடல்நலத்தின் வளர்ச்சி குறித்து டாக்டர் முகம்மது இப்ராகிம் ஆகியோர் பேசினார்கள்.

கருத்தரங்கில் டாக்டர்கள், செவிலியர்கள், செவிலியர் கல்லூரி மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கத்தின் முடிவில், பிக்கி அமைப்பு நிர்வாகி ரூபன் ஹாப்டே நன்றி கூறினார்.

Next Story