கடலில் மூழ்கி இறந்த மீனவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும் - தமிழக அரசுக்கு நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை


கடலில் மூழ்கி இறந்த மீனவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும் - தமிழக அரசுக்கு நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை
x
தினத்தந்தி 14 July 2019 10:45 PM GMT (Updated: 14 July 2019 7:50 PM GMT)

கடலில் மூழ்கி இறந்த பாம்பன் மீனவர்கள் குடும்பத்தை நேரில் சந்தித்து நவாஸ்கனி எம்.பி. ஆறுதல் கூறினார். மேலும் தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பனைக்குளம்,

மண்டபம் கடற்கரையில் இருந்து பாம்பன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் நாட்டுப்படகுகள், விசைப்படகுகள் மூலம் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த மீனவர்கள் மண்டபம் கடற்கரையில் இருந்து ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்கும் போது பல்வேறு அசம்பாவிதங்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுவதும், மாரடைப்பு உள்ளிட்ட உடல்நலக்குறைவால் இறந்து போவதும், பலத்த காற்று வீசும்போது திசைமாறி செல்லும் படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி பாம்பன் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற அந்தோணி, மியோன், வின்தாஸ் மற்றும் ஸ்டீபன் ஆகிய 4 மீனவர்களும் காற்றின் வேகத்தில் படகு திசைமாறியதால் மீண்டும் கரை திரும்பாமல் மாயமாகினர். இதில் 4 நாட்களுக்கு பிறகு அந்தோணி, ஸ்டீபன் ஆகிய 2 மீனவர்கள் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த போது அந்த வழியாக சென்ற மற்ற மீனவர்களால் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டனர். மாயமான மற்ற இரு மீனவர்களும் தண்ணீரில் மூழ்கி இறந்ததை தொடர்ந்து அவர்களது உடல்கள் அடுத்தடுத்து கரை ஒதுங்கின.

இதனால் அந்த மீனவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர்.

இதுபற்றி அறிந்ததும் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி பாம்பனுக்கு சென்று இறந்த மீனவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் ரூ.50,000 நிதி உதவி அளித்தார். அதனை தொடர்ந்து அவர் கூறும்போது, மீனவர்கள் இதுபோன்ற இயற்கை இடர்பாடுகளின் போது மாயமாகினால் அவர்களை செயற்கைக்கோள் உதவியுடன் கண்டுபிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள ரோந்து படகுகள் பழுதாகி கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அந்த படகுகளை சரிசெய்து தீவிர ரோந்து பணியில் ஈடுபடுவதுடன், ஆபத்து காலங்களில் மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். தற்போது கடலில் மூழ்கி இறந்தவர் களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், அவர்களது குடும்பத்துக்கு அரசு பணி மற்றும் கல்வி உள்ளிட்ட உதவிகளை செய்து தர வேண்டும் என்று தெரிவித்தார்.

Next Story