தாம்பரத்தில் பட்டப்பகலில் பயங்கரம் நடுரோட்டில் 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை தப்பி ஓடிய மர்மகும்பலுக்கு வலைவீச்சு


தாம்பரத்தில் பட்டப்பகலில் பயங்கரம் நடுரோட்டில் 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை தப்பி ஓடிய மர்மகும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 16 July 2019 5:00 AM IST (Updated: 16 July 2019 10:44 PM IST)
t-max-icont-min-icon

தாம்பரத்தில் பட்டப்பகலில் மோட்டார்சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். தப்பி ஓடிய கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் கடப்பேரி, அற்புதம் நகர் பகுதியை சேர்ந்தவர் சின்ன அப்புனு என்ற பிரதீப்குமார்(வயது 30). கிழக்கு தாம்பரம், ஆதிநகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் என்ற புட்டி சுரேஷ் (29). இருவரும் நண்பர்கள் ஆவர்.

புட்டி சுரேஷ், கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் அற்புதம்நகர் பகுதியில் இருந்து ஆதிநகர் பகுதிக்கு சென்றார். இவர்கள் இருவர் மீதும் அடிதடி, வழிப்பறி போன்ற வழக்குகள் உள்ளன.

இதில் சுரேஷ், கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளார்.

நேற்று மதியம் பிரதீப்குமார், தனது நண்பர் சுரேசுடன் தனது வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள், அற்புதம் நகர் கலங்கல் தெருவில் இருவரையும் வழிமறித்து நடுரோட்டில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்று விட்டனர்.

இதில் உடல் முழுவதும் பலத்த வெட்டுக்காயம் அடைந்த பிரதீப்குமார், சுரேஷ் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த இரட்டைக்கொலை சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள், அலறி அடித்து ஓடினர்.

கொலை நடந்த பகுதியில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள், தங்களை போலீசார் விசாரிப்பார்களோ என்று பயந்து உடனடியாக தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். இந்த இரட்டைக்கொலையால் அந்த பகுதியில் பீதி ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தென்சென்னை இணை கமிஷனர் மகேஸ்வரி, பரங்கிமலை துணை கமிஷனர் பிரபாகர், தாம்பரம் உதவி கமிஷனர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொலையான இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

கடந்த சிலநாட்களாக பிரதீப்குமாருக்கும், அற்புதம்நகர் மற்றும் கடப்பேரி பகுதியை சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டது. பிரதீப்குமார், சுரேஷ், கோல்டு மணி உள்ளிட்ட அவரது நண்பர்கள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அப்பகுதியில் சுற்றித்திரிந்து உள்ளனர்.

நேற்று முன்தினம் கடப்பேரி அருகே உள்ள பர்மா காலனி பகுதியில் இருந்து மோட்டார்சைக்கிளில் பிரதீப்குமார் மற்றும் அவரது நண்பர்கள் வந்தனர். அப்போது அவர்கள், பின்னால் வந்த லாரிக்கு வழி விடாமல் சென்றதால் கடப்பேரி பகுதியை சேர்ந்த அந்த லாரி டிரைவர் ரங்கநாதன், வழிவிட்டு செல்லுங்கள் என கூறியதாக தெரிகிறது.

இதனால் பிரதீப்குமார் மற்றும் அவரது நண்பர்கள் லாரி டிரைவர் ரங்கநாதனிடம் தகராறில் ஈடுபட்டதுடன், அவரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதையறிந்த ரங்கநாதனின் உறவினர் காக்கா முட்டை என்ற பாபு நேற்று முன்தினம் மதியம் பிரதீப்குமாரின் தந்தை சுகுமாரை சரமாரியாக தாக்கினார். இதனால் இருதரப்பினர் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.

இதற்கிடையில் பிரதீப்குமார், தனது நண்பர்களுடன் அப்பகுதியில் கத்தியுடன் சுற்றித்திரிந்ததை அறிந்த தாம்பரம் போலீசார், அவரிடம் இது தொடர்பாக விசாரணை செய்வதற்காக நேற்று காலை பிரதீப்குமார் வீட்டுக்கு சென்றனர். அவர் வீட்டில் இல்லை.

பிரதீப்குமார் தலைமறைவாக இருந்ததால் அவருடைய மனைவி நதியாவை போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இதை அறிந்த பிரதீப்குமார், தனது நண்பர் சுரேசுடன் அவரது வீட்டுக்கு சென்றபோதுதான், மர்ம நபர்கள் இருவரையும் வெட்டிக்கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த கொலை தொடர்பாக கடப்பேரி பகுதியை சேர்ந்த காக்கா முட்டை என்ற பாபு கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். அற்புதம் நகர் பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட சிலரை போலீசார் தாம்பரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story