மொடக்குறிச்சி சமுதாயக்கூடத்தில், நாளை சுதந்திர போராட்ட வீரர் பொல்லானுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம் - கலெக்டர் சி.கதிரவன் தகவல்


மொடக்குறிச்சி சமுதாயக்கூடத்தில், நாளை சுதந்திர போராட்ட வீரர் பொல்லானுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம் - கலெக்டர் சி.கதிரவன் தகவல்
x
தினத்தந்தி 15 July 2019 10:45 PM GMT (Updated: 15 July 2019 11:34 PM GMT)

மொடக்குறிச்சி சமுதாயக்கூடத்தில் நாளை (புதன்கிழமை) சுதந்திர போராட்ட வீரர் பொல்லானுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம் என்று கலெக்டர் சி.கதிரவன் அறிவித்து உள்ளார்.

ஈரோடு, 

கொங்கு மண்டலத்தின் முதல் சுதந்திர போராட்ட வீரராக திகழ்பவர் தீரன் சின்னமலை. இவர் தனது போர்ப்படையில் சாதி வேறுபாடு இல்லாமல் அனைத்து தரப்பு இளைஞர்களையும் உடன் வைத்திருந்தார். அதுமட்டுமின்றி தனது முக்கிய மெய்க்காவலர்களாகவும், ஒற்றர்களாகவும் அவர் திறமைசாலியான வீரர்களை பயன்படுத்தினார். அவ்வாறு தீரன் சின்னமலையின் மெய்க்காப்பாளராக, சிறந்த ஒற்றராக இருந்து பணியாற்றி சுதந்திர போராட்டத்தில் தனது இன்னுயிரை ஈந்தவர் பொல்லான்.

ஆங்கிலேயர்களின் போர் திட்டங்களை செருப்பு போன்று தோல்களை வடிவமைத்து அதில் குறிப்புகளையும், ஒற்று செய்திகளையும் அனுப்பி வைத்து தீரன் சின்னமலைக்கு அனைத்து விவரங்களையும் கூறி வந்தவர் பொல்லான் என்று தீரன் சின்னமலை வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன. சின்னமலையை கைது செய்த ஆங்கிலேயர்கள், அவருக்கு உதவியாக இருந்த பொல்லானை அறச்சலூர் அருகே உள்ள நல்லமங்காபாளையம் நத்தக்காடு பகுதியில் வைத்து கொலை செய்தனர். தீரன் சின்னமலை வீரமரணம் எய்தியது ஆடிப்பெருக்கு தினமான ஆடி 18 அன்று. ஆனால் அதற்கு முன்னதாகவே ஆடி 1-ந் தேதி (17-7-1805), அதாவது 17 நாட்களுக்கு முன்பே தனது தலைவர் தீரன் சின்னமலைக்காகவும், இந்திய தேசத்தின் விடுதலைக்காகவும் உயிர் கொடுத்த பொல்லானின் நினைவு நாள் நாளை (புதன்கிழமை) வருகிறது.

இளைய தலைமுறையினரும், வருங்கால தலைமுறையினரும் சுதந்திர போராட்ட வீரர் பொல்லானின் வரலாற்றை தெரிந்து கொள்ளவும், அவருக்கு ஆண்டு தோறும் வீர வணக்கம் மற்றும் அஞ்சலி செலுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அருந்ததியர் இளைஞர் பேரவை தலைவர் என்.ஆர்.வடிவேல் கோரிக்கை வைத்தார். அதைத்தொடர்ந்து பல்வேறு அமைப்புகளும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் கருத்தரங்குகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள். இதுதொடர்பாக வழக்கும் தொடரப்பட்டது.

இந்தநிலையில் சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் நினைவு தினத்தையொட்டி வருகிற 17-ந் தேதி (நாளை) அவரது உருவப்படத்துக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம் என்று ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தாலுகாவை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் மெய்க்காவலராக இருந்து ஆங்கிலேயர்களை எதிர்க்க உறுதுணையாக இருந்தவர் பொல்லான். அவரை நினைவுகூறும் வகையில் அவரது நினைவு நாள் அனுசரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில், அரசு அலுவலக வளாகத்தில் பொல்லான் உருவப்படம் வைத்து பொதுமக்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் வண்ணம் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அந்த உத்தரவின் பேரில் வருகிற 17-ந் தேதி (நாளை) காலை 10 மணி முதல் பகல் 12 மணிவரை மொடக்குறிச்சி பேரூராட்சி சமுதாயக்கூடத்தில் பொல்லான் நினைவுநாளை அனுசரிக்கும் வகையில் அவரது உருவப்படம் வைக்கப்படும். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்று பொல்லானுக்கு அஞ்சலி செலுத்தலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் சி.கதிரவன் கூறி உள்ளார்.

இதுபற்றி அருந்ததியர் இளைஞர் பேரவை தலைவர் என்.ஆர்.வடிவேல் கூறியதாவது:-

சுதந்திர போராட்ட வீரர் பொல்லானுக்கு அரசு விழா கொண்டாட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அதை விசாரித்த நீதிபதி அரசு விழா கொண்டாட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில் ஈரோடு மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொல்லான் அரசு விழா எடுக்க ஆக்கப்பூர்வமான ஏற்பாடுகளை செய்து உள்ளார். இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்து உள்ளது. தொடர்ந்து பொல்லான் மணிமண்டபம், குதிரையில் செல்லும் பொல்லான் உருவச்சிலை ஆகிய கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக நேற்று நல்லமங்காபாளையம் பகுதி பொதுமக்கள் சிலர் அறச்சலூரில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

Next Story